திமுக அரசு வணிகர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்!

“திமுக அரசு வணிகர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்று மதுரையில் நடந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் இன்று (ஜன.22) தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழா சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் பவள விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். கருணாநிதியின் பிறந்த ஆண்டும், இந்த அமைப்பு உருவான ஆண்டும் ஒரே ஆண்டுதான். அவரது நூற்றாண்டில், வர்த்தக சங்கமும் நூற்றாண்டு நிறைவு விழா காண்பதற்காக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், வணிகர்களுக்கு ஆதரவாக, நலனுக்காக செய்து வரும் பணிகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதேபோல், நமது அரசின் முயற்சிகளுக்கெல்லாம் நீங்கள் துணையாக இருக்கிறீர்கள். நீங்கள் ஆற்றி வரும் பணிகள் எல்லாம் பாராட்டுக்குரியது.

5,500 உறுப்பினர்கள், 250 இணைப்புச் சங்கங்கள் என்று இந்தியாவிலேயே பெரிய வணிகர் அமைப்பாக இருக்கும் நீங்கள், வணிகர் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். சமச்சீரான, எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையிலான நமது அரசின் பயணத்தில், வணிகப் பெருமக்களான உங்களுடைய ஆதரவு மிக முக்கியம். எங்கள் முயற்சிகளுக்கு எப்போதும் நீங்கள் துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல், உங்களின் வளர்ச்சிக்கும் நம்முடைய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

வியாபாரிகள் வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்கு எப்படி பேசி, பேசி சாமர்த்தியமாக வியாபாரம் செய்வார்களோ, அதேபோல, அரசிடமும் சாமர்த்தியமாக பேசி, செய்யக்கூடிய ஆற்றல் இங்கே இருக்கக்கூடிய நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக விக்கிரமராஜா எப்போது கோட்டைக்கு வந்தாலும் ஏதாவது ஒரு காரியத்தை முடித்துவிட்டு தான் செல்வார். அப்படிப்பட்ட ஆற்றலுக்குரியவர். அவர் முன்னின்று இந்த நிகழ்ச்சிக்கு என்னை வரவேண்டும் என்று அழைத்து வரவழைத்திருக்கிறார். நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை பொறுத்தவரைக்கும், நிச்சயமாக, உறுதியாக பரிசீலிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் சொன்னதைதான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம், அதுவும் உங்களுக்குத் தெரியும். அந்த உணர்வோடு கூறுகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பின்னர், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, சங்கத்தலைவர் என்.ஜெகதீசன் வெள்ளி செங்கோல் வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்எல்ஏ கோ.தளபதி ஆகியோர் பங்கேற்றனர்.