மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசு, மாநிலத்தில் கடந்த வாரத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும். டெல்டா மாவட்ட விளைநிலங்களில் தற்போது 20 முதல் 30 சதவீதம் வரை அறுவடை முடிந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழையால் அறுவடை செய்யமுடியாமல் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் இன்னும் 15 தினங்களில் அறுவடை செய்யக்கூடிய உளுந்தும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களிலும் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாய்ந்து அறுவடை செய்யமுடியாமல் வீணாகியுள்ளது.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 940 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி உள்ளிட்ட பயிர்கள் தற்போது பெய்த கனமழையால் 100 சதவீத அளவுக்கு அறுவடை செய்யமுடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், கோவில் பத்து உட்பட சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடியில் நோய் தாக்குதல் மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தொடர் நஷ்டத்திற்கு ஆளாகி, இந்த ஆண்டும் பருவம் தவறிப் பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற வேளையில் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி, வயலில் சாய்ந்து, அறுவடை செய்யமுடியாமல் உள்ள அனைத்து விதமான பயிர்களையும் சரியாக கணக்கெடுத்து விவசாயிகளின் விளைநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை பாதுகாக்கும் வகையில் போதுமான அளவில் தார்ப்பாய்கள் இருப்பில் இருக்க வேண்டும். பருவம் தவறி மழை பெய்வதால் நெல் மூட்டைகள் பாதிக்காதவாறு அவ்வப்போதே விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். சில நெல்கொள்முதல் நிலையங்களில் எடை போடுவதில் குறை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுவும் சரிசெய்யப்பட வேண்டும்.

முக்கியமாக தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். எனவே தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களால் விவசாயிகள் அடைந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும், தொடர் விவசாயத்திற்கு உதவிடும் வகையிலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.