காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை!

காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் கைது செய்வதற்கான ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் அந்தேரியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மூன்று மாதத்திற்குள் மனுதாரருக்கு ரூ. 3.72 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு தொடர்பாக ராம் கோபால் வர்மா கூறுகையில், “அந்தேரி நீதிமன்றத்தில் எனக்கு எதிராக உள்ள இந்த வழக்கு, கடந்த ஏழு வருடத்திற்கு முன்னதாக போடப்பட்டது. இது 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் தொடர்பான எனது முன்னாள் தொழிலாளர் தொடர்பானது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய வழக்கறிஞர் நீதிமன்றம் ஆஜரானார். இது 2.38 லட்சம் ரூபாயை கொடுப்பது பற்றியது அல்ல. எனக்கு எதிராக புனையப்பட்ட வழக்கை நான் மறுப்பது தொடர்பானது. தற்போதைக்கு இதைத்தான் என்னால் கூற முடியும்” என தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா மீது வழக்கு தொடர்ந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக ஹார்டு டிஸ்க் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. 2018 பிப்ரவரி முதல் மார்ச் 2018 வரை 2.38 லட்சம் ரூபாய்க்கு ராம் கோபால் வர்மா நிறுவனத்திற்கு ஹார்டு டிஸ்க் வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்ட காசோலை போதிய பணம் இல்லாம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராம் கோபால் வர்மாநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு, 2-வது செக் வாங்கப்பட்டு, வங்கியில் செலுத்தப்பட்டது. அப்போது செக் வழங்கியவர் பணம் விடுவிக்கப்படுவதை தடுத்ததால் மீண்டும் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் வழக்கு தொடர்ந்துள்ளது.