அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, கலந்தாய்வு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கு காரணமாக நடைபெறவில்லை. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருவதால், அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர, ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
தி.மு.க. அரசிற்கு உண்மையிலேயே மாணவர்களின் கல்வி மீது அக்கறை இருந்திருந்தால், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைவுபடுத்தி காலிப்பணியிடங்களை நிரப்பி இருக்க வேண்டும். இதைச் செய்யாததால் இந்த வழக்கு 20 முறைக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கல்வியின் இன்றியமையாத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.