மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துவிட்டது.
அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை, வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இதேபோல் 2016 – 2021 கால கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்த வழக்கையும் லஞ்ச ஒழிப்புத் துறை அவர் மீது தொடர்ந்துள்ளது.
இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய, அவை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது வேலுமணி சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு ஆஜராகி வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18-க்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம் அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணியின் தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.