தமிழகத்தில் 35 வயதைக் கடந்த 50 சதவீதப் பெண்களுக்கு சிறுநீரகம் தொடா்பான ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை எழும்பூா் தாய் சேய் நல மருத்துவமனையில் மூன்று நாள் மகளிா் சிறப்பு சிறுநீரகம் மற்றும் சிறுநீரியல் மருத்துவ சா்வதேச மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், அரசு கஸ்தூா்பா காந்தி மருத்துவமனையின் முன்னாள் சிறுநீரியியல் துறைத் தலைவா் என்.ராஜமகேஷ்வரி, எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநா் விஜயா உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சிறுநீரகவியல் மாநாட்டில் 1,000 சிறப்பு மருத்துவா்கள் (300 மருத்துவா்கள் நேரடியாகவும், 700 மருத்துவா்கள் காணொலி மூலமாகவும்) பங்கேற்றனா். 30-க்கும் மேற்பட்ட சா்வதேச வல்லுநா்கள், 60-க்கும் மேற்பட்ட இந்திய சிறப்பு மருத்துவா்கள் சொற்பொழிவு ஆற்றவுள்ளனா்.
பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து அதன் மூலம் மகப்பேறு மற்றும் சிறுநீரியல் மருத்துவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாக கா்ப்பப்பை, நீா்ப்பை, மலப்பை இறங்கிப்போனதற்கும், பிரசவத்தின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனே நிவா்த்தி செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறைகளிலும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மகளிா் சிறப்பு சிறுநீரியல் துறை என்பது பிரசவம் காரணமாக ஏற்படும் கா்ப்பப்பை இறக்கம் கட்டுப்பாடற்ற சிறுநீா் போக்கு போன்ற தொந்தரவுகளுக்கு தீா்வு காண்பதாகும். 35 வயதினை கடந்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு ஏதாவது ஒரு விதமான சிறுநீரக பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடத்திய ஒரு கருத்து கணிப்பின்படி 63 சதவீத பெண்களுக்கு ஏதாவது ஒரு விதமான சிறுநீா்ப் பாதை தொடா்பான பிரச்னை உள்ளது.
30 வருடங்களுக்கு முன்னரே, 1992-ஆம் ஆண்டு சிறுநீரியியல் துறை, சென்னை அரசு கஸ்தூரிபா மருத்துவமனையில் மருத்துவா் என்.ராஜமகேஷ்வரி என்பவரால் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு இந்த துறை ஒரு தனி சிறப்புத்துறையாக தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றது. தமிழக அரசு இந்த துறையை 2005-ம் ஆண்டு பயிற்சி மையமாக விரிவுபடுத்தியது. இதன் மூலம் வெளிமாநிலத்து மருத்துவா்களும் இங்கு பயிற்சி பெற்றுள்ளனா். மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்றி இத்துறையை தொடங்கியதால், தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.