டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது அசாம் முதல்வர் வழக்கு!

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சர்பானந்த சோனவால் தலைமையில் இருந்த பா.ஜ., அரசில், ஹிமந்த பிஸ்வா சர்மா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். நாட்டில், 2020ல் கொரோனா பரவிய சமயத்தில், தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை கொள்முதல் செய்ய அசாம் அரசு வழங்கிய ஒப்பந்தத்தில், சர்மா முறைகேடு செய்ததாக தகவல் வெளியானது.

இது பற்றி, டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான மனீஷ் சிசோடியா கூறுகையில், “கொரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கும் ஒப்பந்தத்தை, சர்மா, தன் மனைவி நடத்தும் நிறுவனத்துக்கு வழங்கி உள்ளார். மேலும் அசாம் அரசு, இந்த சாதனங்களை சர்மா மனைவியின் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு வாங்கியுள்ளது” என்றார்.

இதை சர்மாவும், அவரது மனைவியும் உடனடியாக மறுத்தனர். சிசோடியா மீது, மானநஷ்ட வழக்கு தொடர்வோம் என, தெரிவித்தனர். இதையடுத்து, சர்மாவின் மனைவி ரினிகி புயான், 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, சிசோடியா மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சிசோடியா மீது கவுஹாத்தி நீதிமன்றத்தில் நேற்று, மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.