புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார். இதைதொடர்ந்து, இன்று 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள தவெகவின் புதிய நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக பனையூரில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், மக்களுக்காக இந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காகவே நிர்வாகிகள் செயல்பட வேண்டும். மக்கள் இயக்கமாக இருந்த நேரத்தில் நீங்கள் நன்றாக பணியாற்றி வந்தீர்கள். தற்போது உங்களை நம்பியே கட்சியை தொடங்கியுள்ளேன். கட்சிக்கு அனைவரும் உண்மையாக, நேர்மையாக உழைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதை விடவும் இனி வரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.