பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், அதிகாலையில் பெண்கள் சென்று கொண்டிருந்த காரை தி.மு.க. கொடி கட்டிய வாகனத்தில் சென்றவர்கள் துரத்திச் சென்று வழிமறித்து அந்தப் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், பெண்களை காரை விட்டு இறங்குமாறு மிரட்டியதாகவும் வெளியாகியுள்ள வீடியோ காட்சியை பார்க்கும்போது நெஞ்சு கொதிக்கிறது. நாம் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோமோ இல்லை வேறு ஏதாவது மாநிலத்தில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்நாடு வன்முறைக் காடாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் தேவையில்லை.
எத்தனையோ சம்பவங்கள் நடந்தும் மக்களுக்கான பாதுகாப்பினை, குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஒருவேளை தி.மு.க.வினர்தான் இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு சாதகமாக தி.மு.க. அரசு நடந்து கொள்கிறதோ என்ற ஐயமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
மேற்படி கொடூரச் செயலும், போதிய பாதுகாப்பினை தி.மு.க. அரசு வழங்காததும் கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தரவேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.