சட்டசபையில் தீர்மானம் போட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை. போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் இன்று அரிட்டாபட்டி சென்றார்.
அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் எடுக்க போவதாக மத்திய அரசு கூறியது. அதனால் மக்கள் சங்கடப்பட்டனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் மக்களுக்கு எதிரான திட்டத்தை கொண்டு வந்ததில்லை. டங்ஸ்டன் திட்டமும் கூட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோருக்கு எப்படிப்பட்ட பகுதி என்பதே தெரியாது. மத்திய அரசு எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழக அரசு தரப்பில் கோயில்கள் பற்றியோ, சமணர் படுகை பற்றியோ, விவசாய நிலங்கள் பற்றியோ குறிப்பிடவில்லை. இதன்பின்னர் தான் ஏலம் விடப்பட்டது. பின்னர் நவம்பரில் டெண்டர் எடுத்த பின் தான், அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் நாம் அவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தோம். இதன்பின் அங்கேயே அம்பலக்காரர்களுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி கொடுத்தார்.
மத்திய அரசு ஒரு திட்டத்தை ரத்து செய்வது எளிதான விஷயமல்ல. ஆனால் 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியது. அரிட்டாபட்டியில் மக்கள் நடத்திய போராட்டம் நியாயமானது. சட்டசபையில் தீர்மானம் போட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை. வாரவாரம் சட்டசபையில் தீர்மானம் போடுவதே திமுகவின் வேலை. ஆனால் விவசாயிகளின் கண்ணீருக்காக மட்டுமே திட்டம் ரத்து செய்யப்பட்டது.
மாநில அரசை கண்டெல்லாம் பயப்படவில்லை. உக்ரைன், ரஷ்யா நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் மோடி, மாநில அரசை கண்டா பயப்படுவார். இந்த மக்களின் அன்புக்காக மட்டுமே வந்துள்ளோம். இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை. அந்த உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்த மக்களின் தோழனாக நரேந்திர மோடி எப்போதும் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.