பாஜகவின் பி டீம் நாம் தமிழர் என்றால், திமுக தான் ஏ டீம்: சீமான்!

பாஜகவின் பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், பாஜகவின் ஏ டீம் திமுக தான் என்று சீமான் விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று பரப்புரையில் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். தேர்தல் ஒன்றை மட்டுமே கவனத்தை வைத்து, எப்படியெல்லாம் வாக்குறுதிகளை கொடுத்து வாக்கினை வெல்ல முடியும் என்றே செயல்படுவார்கள். வாக்கினை பெறுவது வேறு, வாக்கினை வெல்வது வேறு. வாக்கினை வெல்வது என்பது பணத்தை கொடுத்து வாங்குவது தான். தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் அடுத்த தேர்தலை மட்டுமே சிந்திக்கிறார்கள். 60 ஆண்டுகால திராவிடர்களின் ஆட்சியின் லட்சணம் என்னவென்றால், ஆயிரம் ரூபாய்க்கு என் அம்மாவும், தங்கையும் கையேந்துவது தானா.. இதுதான் நவீன தமிழ்நாட்டில் வருகிறது என்கிறார்கள். ரூ.1,000க்கு கையேந்தினால் புரட்சி அல்ல.. அது வறட்சி.. இப்படியொரு அரசியலை துரத்திவிட்டு, மக்களுக்கான அரசியலை கையெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி.

நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று ஏமாற்றி கொண்டே இருக்கிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அப்போது கூட்டணியில் இருந்த கட்சி திமுக. ஜிஎஸ்டி வரிக்கு ஆதரவு கொடுத்ததும் இதே ஆட்சியாளர்கள் தான். பெரியாரை வேண்டுமென்றே விமர்சிக்கிறான் சீமான் என்கிறார்கள். நான் வேண்டுமென்று விமர்சிக்கவில்லை. வேண்டாம் என்று தான் பெரியாரை விமர்சிக்கிறேன். இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான். அந்த வரிசையில் தமிழ்நாட்டின் பெரியார் இருக்கிறார். சரியாக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான். 2026ல் புதிய அரசியல் படைப்போம்.

என்னை பாஜகவின் பி டீம் என்று சொல்கிறார்கள். பாஜகவின் பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், ஏ டீம் திமுக தான். அதனை ஒழிக்க வேண்டும். என்னை சிறையில் அடைக்கலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது. பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களை திமுகவில் சேர்க்கிறார்கள். எந்த கட்சி என்று கூட பெயர் சொல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.