‛என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு கிடையாது!

‛மூடுபனி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‛என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை. இந்த பாடலுக்கான காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளது. இதனால் இளையராஜா அனுமதியுடன் மகன் யுவன்சங்கர் ராஜா அந்த பாடலை நடிகர் ஜீவாவின் ‛அகத்தியா’ திரைப்படத்தில் பயன்படுத்த தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழ் சினிமாவில் 1980ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் மூடுபனி. இந்த திரைப்படத்தை இயக்கியவர் பாலு மகேந்திரா. படத்தில் பிரதாப் போத்தன் மற்றும் ஷோபா உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்த திரைப்படத்தை ராஜா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படத்தில் ‛என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலை பிரபல பாடகர் யேசுதாஸ் பாடியிருந்தார். இந்த பாடல் செம ஹிட் அடித்தது. இன்று வரை பலரும் கேட்கும் பாடலாக ‛என் இனி பொன் நிலாவே’ பாடல் ஒலித்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தான் ‛என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ள ‛அகத்தியா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது ஒரிஜினலான ‛என் இனிய பொன் நிலாவே’ பாடல் என்பது ‛அகத்தியா’ திரைப்படத்துக்காக மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் பா விஜய் இயக்கி உள்ள இந்த ‛அகத்தியா’ திரைப்படத்தை ஐசரி கே கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர்கள் ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணி தாமதத்தால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ‛அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ‛அகத்தியா’ திரைப்படத்தின் ‛மூடுபனி’ திரைப்படத்தின் ‛என் இனிய பொன் நிலாவே’ என்ற திரைப்படத்தின் பாடலை அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மூடுபனி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களின் சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் மியூசிக்கல் வொர்க்ஸ் ஆகியவற்றின் காப்புரிமை தங்களிடம் தான் உள்ளது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மினி புஷ்கர்னா விசாரித்தார். அப்போது, ‘என் இனிய பொன் நிலாவே பாடலை’ உபயோகப்படுத்த மூடுபனி படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்றதாக ‛அகத்தியா’ திரைப்படத்தின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்ந்த சரிகம நிறுவனம், ‛‛என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை நாங்கள் தான் வைத்துள்ளோம். இதனால் இசையமைப்பாளர் என்ற முறையில் இளையராஜா அந்த பாடலை பிறருக்கு வழங்க முடியாது” என்று அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது. அதை கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ‛‛என் இனிய பொன் நிலாவே பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளது. அந்த பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை. இதனால் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா 3ம் நபருக்கு வழங்க அனுமதி அளிக்க முடியாது. எனவே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட அந்த பாடலை ‛அகத்தியா’ திரைப்படத்தில் இடம்பெற வைத்து வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.