‘கோமியம் குடிப்போம்’ திட்டத்தின் பெருமை முர்மு உரையில் இல்லையே: சு.வெங்கடேசன்!

கோமியம் குடிப்பதால் காய்ச்சல் குணமானது என்று சென்னை ஐஐடி இயக்குநர் பேசியிருந்தது விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் ‘கோமியம் குடிப்போம்’ திட்டத்தின் பெருமை குடியரசுத் தலைவர் முர்மு உரையில் இல்லையே என்று சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை தி.நகரில் உள்ள கோசோலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், தனது தந்தைக்கு காய்ச்சல் இருந்த நேரத்தில், அவர் கோமியம் குடித்ததாகவும் உடனே காய்ச்சல் விட்டுவிட்டது என்றும் கூறியிருந்தார். இவரது கருத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. சலசலப்புகளை அடுத்து இந்த விவகாரம் குறித்து விரிவாக பேச செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் அவர், “அமெரிக்காவில் நேச்சர் இதழில் கோமியத்தில் மருத்துவ குணம் இருக்கிறது என்பதற்கான ஆய்வு அறிக்கை வெளியானதற்கான ஆதாரம் இருக்கிறது. பத்திரிகையாளர்களான உங்களுக்கு நான் அந்த லிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறேன். தற்போது அமேசானில் கூட பஞ்சகவ்யம் விற்பனைக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பதிலுக்கு பத்திரிகையாளர்கள், “நீங்கள் சொல்லும் ஆய்வு அறிக்கையில் பஞ்சகவ்யம் நல்லது என்று கூறியிருக்கிறார்கள். வேறு சில ஆய்வுகளில் அது நல்லதல்ல என்று கூறியிருக்கிறார்களே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காமகோடி, “நீங்கள் சொல்லும் ஆய்வு அறிக்கையை நான் பார்க்கவில்லை. நாங்கள் சில பண்டிகை நாட்களில் பஞ்சகவ்யத்தை சாப்பிடுவோம். நானும் சாப்பிடுவேன்” என்று கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு கண்டனங்கள் பறந்தன. கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தைப் பேசியிருக்கிறார். அறிவியல்படி கோமியம் என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியலுக்கு எதிராகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று பல்வேறு கட்சிகளும் விமர்சித்திருந்தன.

சிபிஎம் ஒருபடி மேலே சென்று, ஐஐடி இயக்குநர் பதவியிலிருந்து விலகுவது மட்டுமல்லாது அவரது டாக்டர் பட்டத்தையும் பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று சு.வெங்கடேசன் எம்பியும் காட்டமாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு குடியரசு தலைவர் உரையில் காசநோய் ஒழிப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பிற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். காய்ச்சல் ஒழிப்பிற்காக காமகோடி முன்வைத்த “கோமியம் குடிப்போம்” திட்டத்தின் பெருமை அதில் இடம் பெறவில்லை. இது பாஜகவின் கோமியோபதி பிரிவுக்கு பெரும் பின்னடைவே” என்று கூறியுள்ளார்.