பாஜகவுக்கு தமிழகம் குறித்து அக்கறை இல்லை என்பது போன்று பேசுவது தவறு என திமுகவுக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் என்ற வார்த்தை இல்லை என்று திமுகவினர் கூறுகின்றனர். வருமான வரி உச்சவரம்பு உயர்வு தமிழகத்துக்கும் தான். நாடாளுமன்றத்தில் தமிழ், தமிழகம், திருக்குறள் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிகார் மாநிலம் வளர்ந்து வருவதன் அடிப்படையில் திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்துக்கான நிதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜகவும் குறிக்கோளுடன் இருக்கிறது. பாஜகவுக்கு தமிழகம் குறித்து அக்கறை இல்லை என்பது போன்று திமுகவினர் பேசுவது தவறு. பாஜகவோடு போட்டியிடும் தன்மை திமுகவுக்கு இல்லை. பாஜகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பவர் கட் செய்வது வாடிக்கையாகிவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கு விசாரணை அதிகாரி விலகும் அளவுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
சுங்கக் கட்டணத்தை தவிர்க்கவே, ஈசிஆர் விவகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காரில் திமுக கொடி கட்டப்பட்டிருப்பதாக காவல்துறை சொல்வதன் மூலம் தவறு செய்வதற்கு திமுக கொடியை பயன்படுத்தலாம் என ஒப்புக்கொள்கின்றனர். திமுக கொடிக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை ஆர்.எஸ்.பாரதியும், காவல்துறையும் ஒப்புக்கொள்கின்றனர். திமுக கொடி பறக்கும் கார்களில் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில் தமிழகம் இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திலும் எந்த கட்சிக்கும் முதலில் தொடர்பில்லை என கூறிய நிலையில், மாசுபட்டவர் யார் என இதுவரை தெரியவில்லை. முதலில் ஆதவ் அர்ஜுனாவை அனுப்பிவிட்டு பின்னர் ஆதவனிடம் இருந்து திருமாவளவன் வெளியேறுவாரா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.