2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: எல்.முருகன்!

திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க போராடுபவர்களை கைது செய்வது கண்டனத்துக்குறியது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அங்கு ஆடு பலி கொடுக்க சென்ற நபர்களால் பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி பிரியாணி சாப்பிட்டு மலையின் புனிதத்தைக் கெடுத்துள்ளார். இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை இழிவுப்படுத்தி, அவமானப்படுத்துகின்ற செயல். பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதோடு, இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், இந்துக்களுக்கு எதிராக அநீதி நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி 4-ம் தேதி (நாளை) திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இந்நிலையில், இதை தடுக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டுபவர்கள், நோட்டீஸ் வழங்குபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு சாப்பிட்டவர்கள், அங்கிருந்த சமணர் படுகைகளில் பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யாத போலீஸார், முருகன் மலையை காக்க ஜனநாயக முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. திமுக கூட்டணி கட்சிகளின் இந்து விரோத செயலுக்கு வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.