கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்: சிபிஎம்!

கவுரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெ. சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7300 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்பட்டு வருகிறது. மே மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை.மேலும் இவர்களுக்கு மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை மறுக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாத ஊதியம் ரூ.50,000 வழங்க வேண்டும் எனவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து ஒருவார காலமாக போராடி வருகின்றனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காக, ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களை மாநில அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு உரிய தீர்வு காண வேண்டுமெனவும், போராடும் பேராசிரியர்கள் மீது துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது சரியான அணுகுமுறையாகாது, அதனை கைவிட வேண்மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.