நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி ஊராட்சியில் உள்ள அருந்ததியர் குடியிருப்புப் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிலுவம்பட்டி கிராமத்தில் அருந்ததியர் காலனிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஜெயபிரகாஷ் என்பவருடைய குடிசை வீட்டுக்கு சென்று உரையாடிய பிறகு, தேநீர் அருந்தினார். அப்போது தேநீர் சூடாக இருக்கு, குறைவான சூட்டில் தாருங்கள் என்று கூறினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூரில் அரசு நிகழ்ச்சியிலும், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள 1.7.2022 அன்று மாலை வருகை தந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (2.7.2022) நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர், சிலுவம்பட்டி ஊராட்சி, அருந்ததியர் குடியிருப்புக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து 3 சதவிகித உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் மற்றும் பல்வேறு உயர்கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் ஹோமியோபதி மருத்துவர் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தி அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய முதல்வர், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கல்வி குறித்த விவரங்களையும், அக்குடியிருப்பில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மருத்துவர் ஜெயபிரகாஷ், அவரது மனைவி எம். தரணிபிரபா, பி.எஸ்.சி., பி.எட் படித்து முடித்து தற்போது எம்.எஸ்.சி முடிக்கும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் குடியிருப்பில் குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது ஜெயபிரகாஷின் குடும்பத்தினர் முதல்வருக்கு தேநீர் வழங்கி அன்புடன் உபசரித்தனர். தொடர்ந்து, கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வரும் செல்வன் கவின் என்ற மாணவனுடனும், புதுக்கோட்டையில் மருத்துவம் படித்து வரும் செல்வி தாரணி என்ற மாணவியுடனும் உரையாடிய முதல்வர், அவர்களது மேற்படிப்பு குறித்து கேட்டறிந்து, கல்வி தான் ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம், யாராலும் அழிக்க முடியாதது கல்வி தான், எனவே நன்கு உயர்கல்வி படித்து சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும் சேவை ஆற்றிட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
பின்னர், பழனி என்பவரது வீட்டிற்கு சென்ற முதல்வர், அவரது பேத்தி செல்வி சமிக்ஷாவிடம் அவரது படிப்பு குறித்து கேட்டார், அதற்கு அம்மாணவி 10-வகுப்பு படித்து வருவதாக தெரிவித்தார். நன்கு படித்து உயர்கல்வி பயில வேண்டுமென்றும், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்து கொடுக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். முதல்வர் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங்., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.