கலவரம் வேண்டாம்; வன்முறை வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம்: வைகோ!

தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி பேச சில புல்லுருவிகள்; தமிழினத் துரோகிகள் துணிந்துவிட்டனர்; ஆனால் கலவரம் வேண்டாம்; வன்முறை வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி மறைமுகமாக பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ எம்பி கூறியதாவது:-

உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் நெஞ்சங்களிலே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிற நேற்றும் இன்றும் நாளையும் என்றென்றும் தமிழ்க் குலத்துக்கு வழிகாட்டக் கூடிய பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று. பேரறிஞர் அண்ணாவுக்கு இன்று வீரவணக்கம் செலுத்தி இருக்கிறோம். அறிஞர் அண்ணாதான் தந்தை பெரியாரின் தலை மாணாக்கர்; இந்த தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டும் தலைவர்; தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தேவை என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. திராவிட நாடு பிரச்சனையில், இந்த தனி திராவிட நாடு கோரிக்கையை இன்றைக்கு நாங்கள் ஒத்திவைத்திருக்கிறோம்; ஆனால் தமிழகம் வஞ்சிக்கப்படுமானால் -தென்னாடு வஞ்சிக்கப்படுமானால் அந்த திராவிட நாடு பிரிவினை கோரிக்கை குரல் எழும் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசினார்.

போப் ஆண்டவரை சந்தித்த போது, உங்களுக்கு என்ன வேண்டும் என அண்ணாவிடம் கேட்டார். அப்போது, கோவா மக்களின் விடுதலை வீரன் இராணடே கைது செய்யப்பட்டு போர்ச்சுகல் நாட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்; அவரை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. இராணடே விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த அண்ணாதான் தமது விடுதலைக்கு காரணம் என்பதால் நேரடியாக சென்னைக்கு வந்தார்; ஆனால் அவர் வந்த போது அண்ணா மறைந்துவிட்டார்; இதனால் இதே அண்ணா சதுக்கத்துக்கு வந்து மண்டியிட்டு அமர்ந்து கண்ணீர் விட்டார் இராணடே.

இன்றைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நிலைநாட்டிவிட நரேந்திர மோடி துடிக்கிறார். அண்ணாவின் பெரும்படையில் 60 ஆண்டுகள் இருந்தவன் நான்.. இதில் 30 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றினேன்.. 30 ஆண்டுகள் மதிமுக எனும் இயக்கத்தை நடத்தி வருகிறேன். கருணாநிதியின் கடைசி காலத்தில் சந்தித்த போது, 30 ஆண்டுகள் உங்களுக்கு சேனாதிபதியாக பணியாற்றும் பாக்கியம் பெற்றேன்; இனி வரும் காலத்தில் இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன் என்று உறுதியளித்திருக்கிறேன். இப்போதோ, திராவிடர் இயக்கத்தை நசுக்கிவிடலாம் என சில புல்லுருவிகளும் தமிழினத் துரோகிகளும் அண்ணாவையே கொச்சைப்படுத்தி மேடையில் பேசுகிறார்கள்.. அறிவாசான், புதுயுகத்தின் தீர்க்கதரிசி என யுனெஸ்கோவால் போற்றப்பட்ட தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுகின்றவர்களை புனிதமான அண்ணாவின் நினைவிடத்தில் பெயர் சொல்லி குறிப்பிட விரும்பவில்லை. பெரியார் இல்லையேல் நாம் ஏது? பெரியாருக்கு நாம் கடமைப்பட்டவர்கள்.

சென்னை தியாகராயர் நகர் பொதுக் கூட்டத்தில் இறுதியாக பேசிய பெரியார், டெல்லிக்காரனுக்கு இங்கே என்ன வேலை? உன் மொழி வேறு என் மொழி வேறு.. உன் சாப்பாடு வேறு என் சாப்பாடு வேறு.. உன் கலாசாரம் வேறு. என் கலாசாரம் வேறு.. ரகளை வேண்டாம்.. மரியாதையாக ஓடிப் போய்விடு என்று பேசினார். தமிழ்நாடு பிரிவினை மாநாட்டை ஆதித்தனார் நடத்திய போது இனி ஆதித்தனாருக்கு பக்க பலமாக இருப்பேன் என்றார் பெரியார். பெரியார் வசதி படைத்தவர்தான்; தமது பூர்வீக சொத்துகளை திராவிடர் கழகத்துக்கு கொடுத்தவர் தந்தை பெரியார். அவரைப் பற்றி இவ்வளவு காலம் யாரும் பேசத் துணியாதவற்றை பேசி நெஞ்சிலே ஈட்டியை எறிவதைப் போல இப்போது ஒரு சிலர் புறப்பட்டுள்ளனர்; நாங்கள் அமைதியாக இருக்கிறோம்; எந்த கலவரமும் கூடாது; எந்த வன்முறையும் கூடாது என்கிற வகையிலே இருக்கிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.