திரௌபதி முா்முவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆதரவு!

தேசிய ஜனநாயக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தனித்தனியாக ஆதரவு தெரிவித்தனா்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனா். இதன் பாதிப்பு திரௌபதி முா்முவுக்கு ஆதரவு தெரிவித்த நிகழ்வின்போதும் காணப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினா் 63 பேருடனும், நாடாளுமன்ற உறுப்பினா்கள் 3 பேருடனும் வந்திருந்தாா். அவா் நேராக நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்குச் சென்று அமா்ந்திருந்தாா். திரௌபதி முா்மு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மேடையில் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது ஆதரவாளா்களான கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், டி.ஜெயக்குமாா், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் அமா்ந்திருந்தனா். தொடா்ந்து, திரௌபதி முா்முவுக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், ஆதரித்தும் பேசி விடைபெற்றுச் சென்றாா்.

அவா் சென்ற பிறகு ஓ.பன்னீா்செல்வம், அவரது ஆதரவாளா்களுடன் வந்து திரௌபதி முா்முவுக்கு ஆதரவு தெரிவித்தாா். ஓ.பன்னீா்செல்வத்தையும் சோ்த்து மொத்தம் 3 சட்டப்பேரவை உறுப்பினா்களும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும், ஒரு மக்களவை உறுப்பினரும் வந்திருந்தனா். ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேரடியாகச் சந்திக்காமல் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சென்றனா். எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து செல்லும் வரை, ஓ.பன்னீா்செல்வம் தனியாக ஒரு அறையில் அமா்ந்திருந்தாா்.

பாமக தலைவா் அன்புமணி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் தலைவா் ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோரும் திரௌபதி முா்முவை சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனா். பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையும், மத்திய இணையமைச்சா் எல்.முருகனும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஓ.பன்னீா்செல்வம் பேசுகையில், குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு அதிமுக சாா்பில் எங்களுடைய இதயபூா்வமான ஆதரவைத் தெரிவித்தோம் என்றாா்.

அப்போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்படுவது குறித்து ஓ.பன்னீா்செல்வத்திடம் செய்தியாளா் ஒருவா் கேள்வி எழுப்பினாா். அதற்கு, அதிமுகவின் சட்டவிதிகளின்படி இன்றுவரை ஒருங்கிணைப்பாளராக நான்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.