முதல்வர் முக ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் நடத்தும் பணித் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்த ஏடிஜிபி கல்பனா நாயக், தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது புயலைக் கிளப்பி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது முதலில் மின் கசிவு என கூறப்பட்ட நிலையில், தன்னை கொலை செய்ய திட்டமிட்ட சதி என ஏடிஜிபி கல்பனா நாயக் டிஜிபி, தலைமை செயலாளர் ஆகியோருக்கு புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் ஏடிஜிபியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளது. திமுக அரசின் நிர்வாகம் தான் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்? காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.