நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து 120க்கும் மேற்பட்ட என்.சி.சி மாணவர்கள் டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்று உள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவர்கள் விமானத்தில் பயணிப்பதற்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெல்லி அனுப்பினோம். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளோம். சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண்ணுதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு, அவருக்கு நான் பதில் சொல்வதே கிடையாது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக சென்னை ஜாபர்கான் பேட்டையில் மதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளால் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை அருகே வந்த அடையாளம் தெரியாத நபர் சிலையை கும்பிட்டதுடன், தனது காலணியால் பெரியார் சிலையை அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தை செய்த நபரின் பெயர் அஜய் என்பதும், அவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளதும் தெரிய வந்தது. அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். அப்பகுதியில் ஒன்று திரண்டு சீமானின் உருவப்படத்தை தீயிட்டு எரித்து காலணியால் அடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்து உள்ளன.