ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

தமிழக ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு அனுப்பியிருக்கும் மசோதாக்கள் குறித்து, அரசியல் சாசனப்படி தமிழக அரசிடம் ஆளுநர் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசின் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பெஞ்ச், இவ்விவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இன்னொரு ரிட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க வலியுறுத்துகிறார் ஆளுநர் ரவி என்பதைக் குறிப்பிட்டு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பார்திவாலா பெஞ்ச், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்; அல்லது தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு இன்று விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுக்கள் மீது இன்று இறுதி விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்று காலையில் தமிழக அரசு தரப்பில் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் வலியுறுத்தினர். இதனை ஏற்று இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆளுநருக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பிற்பகல் 3 மணிக்கு இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர்; ஒரு பக்கம் ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற விவாதம் எல்லாம் நடைபெற்று வருகிறது என்பதையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாநில அரசு 2-வது முறையாக ஒரு மசோதாவை அனுப்பி வைத்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்றார். மேலும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளால் தமிழக பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது என்றும் முகுல் ரோத்தகி புகார் தெரிவித்தார்.

அப்போது, மாநில ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது; தமிழ்நாடு ஆளுநர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்துவிட்ட பின்னர் என்ன நிவாரணத்தை நாங்கள் தர முடியும்? எந்தெந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்ப முடியும்? ஆளுநர்கள் ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்? என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த 24 மணிநேரத்துக்குள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க வேண்டும்; ஆளுநர் ரவி எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பதை மத்திய அரசு நாளை தெரிவிக்க வேண்டும் என்று அதிரடியான உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.