சென்னையில் பெண் தொழில் அதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை!

சென்னையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.912 கோடி நிரந்தர வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள் ஆறுமுகம். பெண் தொழிலதிபரான இவர், மறைந்த பிரபல தொழில் அதிபர் ஒருவரின் மகள் ஆவார். இவர்களுக்கு சொந்தமாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடந்த 31-ம் தேதி அவரது வீடு உட்பட 3 இடங்களில் 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இவர் நடத்தும் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக டெல்லி சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் முறைகேடான பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மையில், 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், பெண் தொழில் அதிபர் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் என சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான நிலையான வைப்பு ரசீதுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.