வாக்களிக்கும் முன்பு டெல்லியின் நிலையை மனதில் கொள்ளுங்கள்: ராகுல் காந்தி!

டெல்லி பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அதன் தற்போதைய நிலையை மனதில் கொள்ளுமாறு வாக்காளர்களை வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி, டெல்லியில் மிகப் பெரிய ஊழல் செய்து யார்? என்று கேள்வி எழுப்பி கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சாடியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாக்களிக்கும் போது, டெல்லியின் காற்று மாசுக்கு, அசுத்தமான குடிநீருக்கு, மேடு பள்ளமான சாலைகளுக்கு யார் பொறுப்பு என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். தூய்மையான அரசியல் பற்றி பேசும் அதேவேளையில், டெல்லியில் மிகப்பெரிய ஊழல் செய்து யார்?

எனது அன்பான டெல்லி சகோதர, சகோதரிகளே.. இன்று நீங்கள் அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் வேண்டிக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், உங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும், அரசியலமைப்பை வலுப்படுத்தும். மேலும் டெல்லியை மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு இன்று புதன்கிழமை காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 19.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ராஜேந்திர பிரசாத் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். டெல்லி முதல்வர் அதிஷி தனது வாக்கினை செலுத்தினார்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேராவின் கணவர் ராபர்ட் வதேரா வாக்களிக்கச் செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மாற்றம் வேண்டும் என நினைத்தால் அனைவரும் வெளியே வந்து வாக்களியுங்கள். சாதாரண நபர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் அப்படியானவர்கள் அல்ல. அவர்கள் டெல்லியை மோசமாக நிர்வகித்துள்ளனர்” என்றார்.

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து கட்சிக்கு ஹேட்ரிக் வெற்றி பெற்றுத்தரும் முனைப்பில் களம் கண்டுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி என டெல்லியில் ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனதை மாற்றி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி களம் கண்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி ஹேட்ரிக் வெற்றி பெறுமா இல்லை பாஜகவின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறுமா என்பது வரும் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.