மாஞ்சோலை தொழிலாளர்களை நாளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்: டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் செல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். இந்த சந்திப்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசு என்ன உதவிகளை செய்ய வேண்டும் எனவும் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது:

2024 மே மாதம் 31 ஆம் தேதியோடு மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பணிகள் நிறுத்தப்பட்டு எட்டு மாதங்கள் நிறைவுற்று ஒன்பதாவது மாதம் தொடங்கிவிட்டது. ஒருவர் ஒரு நாள் பசியைத் தாங்குவதே கடினமானது; ஒரு வாரப் பசி மிக மிகக் கடுமையானது. ஆனால் மாஞ்சோலை மக்களின் ஒன்பது மாதப் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது!

மாஞ்சோலை மலையக மக்கள் 534 குடும்பங்களில் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றவர்கள், நிர்வாகத்தின் ஆசை வார்த்தைக்கு அடிபணிந்தவர்கள், ஆதாயத்திற்காக மண்டியிட்டவர்கள் என 164 குடும்பங்களைத் தவிர, 370 குடும்பங்கள் எவ்வித வருமானமும் இன்றி அரைப் பட்டினி கால் பட்டினி கிடந்தாகினும் மாஞ்சோலை மலையகத்தில் தங்களது மண்ணுரிமையை மீட்க தன்மான உணர்வோடு தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்; அம்மக்களின் உணர்வுகள் என்றென்றும் மகத்தானது; வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

வளர்ந்து மலர்ந்து மணம் வீசும் தாழம்பூ இதழ்களுக்குள்ளே குடிபுகுந்த ‘அரவங்கள்’ அல்ல அம்மக்கள்; நூறு வருடங்களுக்கு முன்பே குடியேறி மாஞ்சோலையை தாழம்பூவின் நறுமணமிக்க மலர்ச்சோலைகளாக உருவாக்கிய ‘தங்கங்கள்’ அவர்கள்.! மாஞ்சோலைக்கு அம்மக்கள் வந்தேறிகள் அல்ல; அவர்கள் குடியேறிய பின்பு தான் மாஞ்சோலை என்ற வரலாறே உருவானது; அதற்காக மாஞ்சோலை மலையக மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள், சிந்திய ரத்தம், இழந்த உயிர்கள் எதையுமே எதனுடனும் ஒப்பிட முடியாது.

வனச்சோலையான மாஞ்சோலை 100 வருடங்கள் கழித்து தங்களது பிள்ளைகளுக்கு இன்று ஏற்பட்டிருப்பதைப் போன்ற ஒரு சூழல் உருவாகும் என்று இவர்களது முன்னோர்கள் கருதி இருந்தால் ‘மாஞ்சோலை’ என்ற ‘வனச்சோலையே’ உருவாகி இருக்காது; அங்கே தேயிலையும் காபியும் விளைந்து இருக்காது; நுசில் வாடியா குடும்பமும் கொழுத்திருக்க முடியாது. 100 ஆண்டு காலம் இந்த மக்கள் அங்கு வாழாதிருந்திருந்தால் அது ஒரு பொட்டைக் காடாகத்தான் காட்சியளித்திருக்கும்; புற்களும் புதர்களும் கூட இருந்திருக்குமா? என்று சொல்ல முடியாது. 100 ஆண்டுகால வாழ்க்கை ஒருவர் 20 வருடத்திற்கு மேலாக ஒரு நிலத்தில் குடியிருந்து விட்டாலே அவருக்கு அந்நிலத்தைச் சொந்தம் கொண்டாட, அனுபவிக்கச் சட்டப்படி உரிமை வந்து விடுகிறது. ஆனால் அங்கேயே பிறந்து வளர்ந்து ஆறு தலைமுறைகளாக 100 வருடங்களுக்கு மேலாக வாழும் மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்க மட்டும் இந்த அரசு முனைப்புக் காட்டுவதன் அவசர அவசியம் தான் என்ன? மாஞ்சோலையை உருவாக்கிய மக்களை வாழ்விழக்கச் செய்து யாரை வாழ வைக்கத் துடிக்கிறீர்கள்?

நுசில் வாடியாவின் பிபிடிசி நிறுவனம் 99 வருடக் குத்தகைப் பாக்கி ரூ 1100 கோடியை தமிழக அரசுக்குச் செலுத்தாமல் தப்பிக்க நினைக்கிறது.! அதை வசூலிக்க திராவிட அரசுக்குத் தெம்பில்லை; திராணியில்லை.! ஆனால், ஏழை எளிய உழைக்கும் மக்களின் மாஞ்சோலை நிலங்களைப் பறிக்கத் துடிக்கிறது இந்த அரசு.! கடந்த 9 மாதங்களாக அந்த அப்பாவி ஏழை, எளிய மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் முதல்வரான உங்கள் பார்வைக்கு வராமலா போயிருக்கும்! ஒருமுறை அல்ல பலமுறை வந்திருக்கும்.!! எனினும் அந்த ஏழை, எளிய மக்களின் கண்ணீர் முதல்வரின் நெஞ்சில் எவ்வித நெருடலையும் ஏற்படுத்தவில்லை போலும்.

முதல்வர் அவர்களே.! அரிட்டாபட்டிக்கு காட்டிய அக்கறையை மாஞ்சோலை மக்களுக்குக் காட்டத் தவறியது ஏன்? அவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் ஆதி திராவிடப் பறையர் சமுதாய மக்கள் என்பதாலா? ஒரு மாநில அரசு தனது குடிமக்களை ஒன்பது மாதங்கள் வேலை இழப்பு செய்து பட்டினி போடுவதைக் காட்டிலும் சமூகக் கொடுமை வேறு எதுவாக இருந்திட முடியும்! கொடுங் குற்றம் புரிந்த சிறைவாசிகளுக்குக் கூட வேலையும் உண்டு; உணவும் உண்டு. நன்கு உழைத்துக் கொண்டிருந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்டு அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பட்டினி போட்டது எவ்விதத்தில் நியாயம்? பசியோடும் பட்டினியோடும் கந்தல் உடைகளோடும் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தாலும் கூட தங்களுடைய சுயமரியாதையை விட்டு விடாமல் அவர்கள் இந்த நிமிடம் வரையிலும் தலை தாழாமல் வாழ்கிறார்கள்; அந்த மக்களைச் சந்திக்க வருவதென்றால் மாற்றுச் சிந்தனையோடு வாருங்கள். ஊழல் படிந்த வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் அழுக்கடைந்த ஆலோசனைகளைக் கேட்டு அவர்களைச் சந்திக்க வராதீர்கள்!

அம்மக்கள் இத்தனை ஆண்டு காலம் உழைத்துத் தான் பிழைத்திருக்கிறார்கள். அட்டைப்பூச்சிகளால் ஒரு பக்கம்; பிபிடிசி முதலாளியால் இன்னொரு பக்கம் என அவர்கள் ரத்தம் உறிஞ்சப்பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் என்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய கார்த்திகேயன், அதற்குத் துணை நின்ற காவல்துறை, சோரம் போன வனத்துறை மற்றும் அதற்குத் துணை நின்ற அனைத்துத் துறை அதிகாரிகளாலும் 1998 ஜூலை 23-க்கு பிறகு மீண்டும் ஒரு மனித உரிமை மீறல் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. மிக மிக காலம் கடந்து ஏதோ ஒரு காரணத்திற்காக மாஞ்சோலை வருவதாகத் தெரிகிறது. மாஞ்சோலை மலையக மக்கள் எவ்வித யாசகமும் யாரிடமும் கேட்டுக் கையேந்தவில்லை. ஒன்பது மாதக் கால மாஞ்சோலை மக்களின் பட்டினிக்கு நீதி கேட்டு நாங்கள் ஐநாவிற்கும் செல்வோம்; நெதர்லாந்தில் உள்ள ஹேக் சர்வதேச நீதிமன்றத்திற்கும் கூட செல்வோம்.

மாஞ்சோலை மலையக மக்களை அவர்களது வாழ்விடத்திலிருந்து கட்டாயப்படுத்தியோ, ஆசை வார்த்தைகளைக் கூறியோ திருநெல்வேலியில் ஏதோ ஒரு பகுதியில் உள்ள அடுக்குமாடிகளில் குடியமர்த்தி, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஆடுகளையும் மாடுகளையும் நீங்கள் தந்தால் ஒரு அடி நிலம் கூட சொந்தமாக இல்லாத அந்த மக்கள் கால்நடைகளை ‘நிலா’விலா கட்டி வைப்பார்கள்?

ஒரு மனிதனின் வாழ்வாதாரம் என்பது நிலத்தை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை நியதி; அதுதான் நிரந்தரமானது. இதை மனதில் கொள்ளாமல் மாஞ்சோலையிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியமர்த்த ‘சாவிகளை’ வழங்க வருவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல; முறையல்ல.! இதையும் மீறி அடுக்குமாடி வீடுகளுக்குச் சாவி கொடுக்க வருவீர்களேயானால் மாஞ்சோலை மக்கள் மட்டுமல்ல; தமிழக மக்கள் எவரும் ரசிக்கவும் மாட்டார்கள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.

1998 ஆம் ஆண்டு முதல் “மாஞ்சோலை மக்கள் குடியிருக்கக் கூடிய வீடுகளை மக்களுக்குச் சொந்தமாக்கவும், தொழிலாளர்களின் அனுபவத்திலிருந்து வந்த வீட்டிற்கு முன்புறத்திலும் பின்புறத்திலும் காய்கறி பயிரிட்டு வந்த நிலங்களை (Kitchen Garden ) அம்மக்களுக்கே ‘பட்டா’ வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அதற்கு ஒப்புக் கொண்டு தமிழக வனத்துறை அதிகாரிகளும், BBTC நிறுவனத் தலைவர் நுசில் வாடியாவும் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத் தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தனர். ஆனால் அன்றைய தினம் தேர்தல் ஆணையம் 2001 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குத் தேதி அறிவித்து விட்டதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வு கையெழுத்து ஆகாமல் போய்விட்டது. இந்தச் செய்தி மறைந்த தங்களுடைய தந்தையார் அவர்களுக்கும், அன்றைய அரசின் மூத்த அமைச்சர்களுக்கும் மட்டுமே தெரியும்; நீங்களும் அறிந்திருக்க வாய்ப்புண்டு; ஒருவேளை மறந்து போயிருந்தாலும் நினைவூட்ட விரும்புகிறேன்; இன்றாவது அதை நிறைவேற்ற வேண்டுகிறேன். மாஞ்சோலை மக்களுக்கு என்ன தேவை? முதல்வர் அவர்கள் மாஞ்சோலை மக்களின் துயரங்களை உணர்ந்து, 2006 வன உரிமைச் சட்டத்தின் படி, அம்மக்களின் மண்ணுரிமையை, வாழ்வுரிமையை மாஞ்சோலை மலையகத்திலேயே நிலைநாட்டுங்கள்.! நீங்கள் வழங்க நினைக்கும் ஆடு, மாடுகளை வளர்க்கவும், வீடுகளைக் கட்டவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் தலா 2 ½ ஏக்கர் நிலம் மாஞ்சோலையில் வழங்கிட உங்கள் அரசு அரசாணை பிறப்பிக்கட்டும்.! அதுவே, மாஞ்சோலை மக்கள் மட்டுமல்ல; தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.! இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.