முருக பக்தர்கள் மீது கைவைத்தால் காணாமல் போவீர்கள்: அண்ணாமலை!

இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என கூறி முருக பக்தர்கள் மீது கை வைத்தால் காணாமல் போவீர்கள் என அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் மலை முருகன் கோயிலுக்கு சொந்தம் என 1926-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதன்பிறகு திருப்பரங்குன்றம் மலை பாறையை உடைத்து, ரயில்வே சுரங்கம் அமைக்க முற்பட்டபோது, ஆங்கிலேயர்கள் காலத்தில் அதிகாரிகள் அதை தடுத்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக தற்காத்த கோயிலை, இப்போது இருக்கிற திமுக அரசு தாரைவார்க்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இன்னொரு மதத்தை சார்ந்தவர்கள் தான் பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர். முருகன் மலையில் இறைச்சி சாப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அமைச்சர் சேகர்பாபு, வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார். பெண்கள், குழந்தைகளிடம் தவறு செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்காமல், இரவு 2 மணி முதல் பாஜகவினரை வீட்டு சிறையில் வைத்து, பாஜகவினரை அடக்க பார்க்கிறார்கள். ஆனாலும், நீதிமன்ற தீர்ப்பு வந்து, ஒரு மணி நேரத்தில் மக்கள் திருப்பரங்குன்றத்தில் கூடியது, இந்த விவகாரத்தில் மக்கள் எந்தளவுக்கு தன்னெழுச்சியாக வந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

காவி வேட்டி கட்டிக் கொண்டு, பட்டையை போட்டுக்கொண்டு முருக பக்தன், சிவன் பக்தன் என்று சேகர்பாபு சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியிருப்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சேகர்பாபுவும், ரகுபதியும் சொல்லிக்கொண்டிருந்தால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எத்தனை நாட்களுக்கு அமைச்சராகவும், எம்எல்ஏ-வாகவும் அவர்கள் இருக்க போகிறார்கள். மக்கள் பிரதிநிதி என்பதற்காக உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.

2021-ம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் (என்டிபிஎஸ்) 9,632 கஞ்சா வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால், 2022-ல் 588, 2023-ல் 421, 2024-ல் 113 என குறைந்த அளவிலான கஞ்சா வழக்குகளை மட்டும் திமுக போட்டுள்ளது. இப்படி இருந்தால், தமிழகத்தில் கஞ்சா எப்படி கட்டுப்படுத்தப்படும். கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் மாறி இருப்பதற்கு, என்டிபிஎஸ் வழக்குகளில் தெரிகிறது. எனவே, இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று முருக பக்தர்கள் மீது கை வைத்தால், நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவீர்கள். திருப்பரங்குன்றத்தில் நடந்திருப்பது வெறும் ஆரம்பம் தான். வரும் காலத்தில் திமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.