மாநிலங்களின் மொழி, கலாசாரத்தை அழிப்பதே ஆர்எஸ்எஸ் இலக்கு: ராகுல்!

இந்தியாவின் மாநிலங்களின் தனித்துவமான மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளை அழிப்பதுதான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இலக்கு என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.

யுஜிசியானது அண்மையில் திருத்தப்பட்ட விதிகளை வெளியிட்டிருந்தது. இந்த விதிகள் மாநில அரசுகளின் சுயாட்சி உரிமையை பறிக்கக் கூடியதாக இருந்தது. இதனால் தமிழ்நாடு, கேரளா மாநில சட்டசபைகளில் இந்த யுஜிசிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் டெல்லியில் இன்று திமுக மாணவர் அணி சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக கூட்டணியின் காங்கிரஸ், விசிக, மதிமுக எம்பிக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

திமுகவின் இந்த போராட்டத்துக்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கமே பிறரது வரலாறு, கலாசாரம், பாரம்பரியத்தை அழித்து ஒழிப்பது என்பதுதான். ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கலாசாரம் என்பது எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தம். அந்த வரிசையில்தான் பல்வேறு மாநிலங்களில் இருக்கிற கல்வித்துறையின் தன்மையை மாற்றி அமைக்க முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது; ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது; ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான மொழி அடையாளம் இருக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியமாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு, வரலாறு, மொழி ஆகியவற்றால் இணைந்ததுதான் இந்தியா என்கிறது இந்திய அரசியல் சாசனம். ஆகையால் அனைத்து கலாசாரம், பண்பாடு, மொழிகளுக்கும் நாம் உரிய மரியாதையை தர வேண்டும். தமிழர்களுக்கு 3000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறும் பண்பாடும் மொழியும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனைத்தான் அழிக்க நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். இதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

யுஜிசி விதிகளில் திருத்தம் என்பது கல்வி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பானது மட்டுமல்ல.. இந்த நாட்டின் மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் மீதான தாக்குதலாக பார்க்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் மதிக்கப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் நன்கு உணர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம், மொழி, பண்பாட்டை மதித்தாக வேண்டும். இதனால்தான் கல்வியை மாநிலங்களின் பட்டியலுக்கு கொன்டு வர வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. அரசியல் சாசனத்தின் மீது உங்களால் தாக்குதல் நடத்த முடியாது; மாநிலங்களின் உரிமைகள் மீது உங்களால் தாக்குதல் நடத்த முடியாது; மாநிலங்களில் கலாசாரம், மொழி மீது தாக்குதல் நடத்திவிட முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கல்வி உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து பல போராட்டங்களை திமுக முன்னெடுத்தது. இந்தப் போராட்டங்களில் திமுகவுடன் சமாஜ்வாதி கட்சி துணை நிற்கும் என்றார்.