ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை: விஜய்!

“சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று, தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கைத் திருவிழாவான முதல் மாநில மாநாட்டில், சமூக நீதியைப் பின்பற்றும் மண்ணான தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தேன். மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம்.

இந்த விவகாரத்தில், மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. எனவே தான், பிகார் மாநில அரசும் கர்நாடக மாநில அரசும் ஏற்கெனவே சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துள்ளன. மேலும், தற்போது தெலங்கானா மாநில அரசும் வெறும் ஐம்பதே நாட்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை (Caste Survey) நடத்தி முடித்திருக்கிறது. அது மட்டுமின்றி, ஒருபடி மேலே சென்று. அந்த ஆய்வு அறிக்கை மீது சட்டசபையின் சிறப்பு அமர்வுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களைப் பின்பற்றத் தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

இத்தனைக்குப் பிறகும், தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல். தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள். அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரக் காரணமாக இருந்த போராட்டத்தை நடத்தி, இட ஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியவர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார். ‘பெரியாரே எங்கள் தலைவர், தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்’ என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்துக்காக மட்டுமே அவரைப் பற்றிப் பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள் சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பைத்தான் மத்திய அரசு நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன்னோட்டமாகத் திகழும் Caste Survey என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா? அப்படியெனில், தெலங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி? அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, விவாதம் நடத்துவதும் எப்படி? மற்ற மாநிலங்கள் போல் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட தமிழகத்தில் நடத்தவில்லையே ஏன்? இப்படி, எத்தனைக் கேள்விகள் கேட்டாலும், தற்போதைய ஆட்சியாளர்கள் அவற்றை அலட்சியப் போக்குடன் கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.