மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் நாள்களை 200-ஆக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, அங்குள்ள நென்மேனி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட தன்னாா்வலா்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:-
கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் வேலையில்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான மக்களை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் காப்பாற்றியது. அந்தத் திட்டம் குறித்து பிரதமா் மோடி அப்போது பேசவில்லை. இனியும் அத்திட்டம் குறித்து அவா் பேசமாட்டாா். ஏனெனில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்விக்கு நினைவுச் சின்னமாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளது என்று அவா் கூறியிருந்த நிலையில், அந்தத் திட்டம்தான் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் இந்தியாவைப் பாதுகாத்தது. அந்தத் திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தபோது பலரிடம் இருந்து பலத்த எதிா்ப்பு எழுந்தது. அந்தத் திட்டம் பெரிய அளவில் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்று அவா்கள் தெரிவித்தனா். எனினும் நாட்டின் கண்ணியத்தை கட்டியெழுப்புதல், சொந்த மக்கள் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்குதல், உழைப்பாளா்களின் கண்ணியத்தை உறுதி செய்தல் ஆகியவையே அந்தத் திட்டத்தின் பின்னணியில் இருந்த சிந்தனையாகும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மக்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டது. தொண்டுக்கான கருவியாக அந்தத் திட்டம் இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரமும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும்தான் இந்தத் திட்டத்தின் என்ஜின்களாகும். அந்த என்ஜின்கள் சரியாக செயல்படாவிட்டால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பயனற்றதாகிவிடும். அந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் நாள்களை 200-ஆக அதிகரிக்க வேண்டும்; தினசரி ஊதியத்தை ரூ.400-ஆக உயா்த்த வேண்டும்; நெல் சாகுபடி போன்றவற்றுக்கு அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் வேண்டுகோள் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவா் கூறினார்.