மீனவர்களை விடுவிக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசம் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் திமுக எம்பி கனிமொழி கூறியதாவது:-

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். தற்போது கிட்டத்தட்ட 97 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவர் இங்கு வரும் ஒவ்வொரு முறையும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரிடம் வலியுறுத்துகிறார்.

இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களின் கிட்டத்தட்ட 210 படகுகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் தங்கள் படகுகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? இது தமிழ்நாட்டில், குறிப்பாக மீனவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அவர்களின் முழு வாழ்வாதாரம், குடும்பம் மற்றும் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

மீனவர் குழுக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க குழுக்களை அமைப்பதாக உறுதியளித்த மத்திய அரசு, இதுவரை இது குறித்து எதுவும் செய்யவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவர்களை விடுவிக்க அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கடந்த ஒரு மாத காலத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை சிறைகளில் 97 மீனவர்கள் உள்ளனர். அதோடு, அவர்களின் 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், மீனவர்கள் அச்சத்துடனேயே மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் வலைகளை சேதப்படுத்துவது, அவர்கள் பிடித்த மீன்களை பறிமுதல் செய்வது போன்ற அராஜகங்களை செய்து வந்த இலங்கை கடற்படை, கடந்த மாதம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியது.