ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசியசெயற்குழு கூட்டம்!

ஐதராபாத் நகரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இன்று நடக்கிற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க., தென் மாநிலங்களில் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில், பிற மாநிலங்கள்மீது கண் வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. அங்கு பா.ஜ.க.வுக்கும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. அங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதியிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க திட்டம் தீட்டி, அதற்கான காய் நகர்த்தலை பா.ஜ.க. தொடங்கி உள்ளது. அந்த வகையில், 2014-ல் மத்தியில் ஆட்சியைப்பிடித்த பா.ஜ.க. பெங்களூரு, கோழிக்கோடு நகரங்களைத் தொடர்ந்து தனது தேசிய செயற்குழு கூட்டத்தை இந்த முறை ஐதராபாத்தில் ஜூலை 2,3 தேதிகளில் கூட்ட முடிவு எடுத்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று தனி விமானத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பில் மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளவில்லை.

திட்டமிட்டபடி, பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த பிரதமர் மோடியை கட்சித்தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார். இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சக்திவாய்ந்த ஐதராபாத் நகருக்கு வந்திறங்கி இருக்கிறேன். இந்த கூட்டத்தில், கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் நாங்கள் பல்வேறு பரந்த விஷயங்கள் குறித்து விவாதிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த கட்சித்தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:-

பாஜகவின் வளர்ச்சி அரசியலால் எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக மீதான வன்முறை தாக்குதல்களை கட்சித் தொண்டர்கள் எதிர்கொண்டுள்ளனர். நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனே காரணம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கரோனா தொற்று பேரிடர், உக்ரைன் போரில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்டது என சிறப்பாக செயல்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணி முடிகிறது. அதைத் தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக ஐதராபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், தலைவர்கள் வருகையையொட்டி இந்த நகரில் இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.