“தோற்பதில் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்று வருகிறது காங்கிரஸ் கட்சி” என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
டெல்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சரமாரியாக விமர்சித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று மீண்டும் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளனர். டெல்லி தேர்தலில் காங்கிரஸ் டபுள் ஹாட்ரிக் ஜீரோ என்ற வெற்றியைப் பெற்றுள்ளது. நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ், கடந்த 6 முறை தேசிய தலைநகரில் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லை. தங்களுக்குத் தாங்களே தோல்வியின் தங்கப் பதக்கத்தை அளித்து வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தன்னை மட்டுமல்ல, அதன் கூட்டாளிகளையும் சேர்த்து மூழ்கடித்து விடுகிறது. காங்கிரஸ் அதன் கூட்டாளிகளை ஒன்றன் பின் ஒன்றாக அழித்து வருகிறது. இன்றைய காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணிக் கட்சிகளின் அஜெண்டாவை திருடுவதில் ஈடுபட்டுள்ளது. உ.பி.யில், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியைத் திருட முயற்சிக்கிறது, முலாயம் சிங் இதை நன்றாகப் புரிந்துகொண்டார். அதேபோல், தமிழ்நாட்டில், காங்கிரஸ் திமுகவின் மொழியைப் பேசி திமுக வாக்காளர்களை கவர முயற்சிக்கிறது. பீகாரில், காங்கிரஸ் சாதிவெறியின் விஷத்தைப் பரப்பி வருகிறது. அதன் கூட்டாளியான ஆர்ஜேடியின் சொத்தை உண்பதில் ஈடுபட்டுள்ளது. 2014க்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் அவர்கள் இந்துக்களாக மாற முயன்றனர். அவர்கள் கோயில்களுக்குச் சென்றனர், பூஜை செய்தனர், எல்லாவற்றையும் முயற்சித்தனர், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்தால், பாஜகவின் வாக்கு வங்கியை சேதப்படுத்த முடியும் என்று திட்டமிட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் அந்தப் பாதையை மூடியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டாளிகள் இப்போது காங்கிரசின் இந்த தன்மையைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இன்று காங்கிரஸ் கட்சி தேசிய நலனுக்கான அரசியலை செய்யவில்லை. நகர்ப்புற நக்சல்களின் அரசியலை செய்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுகிறோம், இந்திய அரசை எதிர்த்துப் போராடுகிறோம் என்று கூறுகிறார்கள். இது நக்சல்களின் மொழி. இது சமூகத்திலும் நாட்டிலும் அராஜகத்தைக் கொண்டு வருவதற்கான மொழி. இங்கே டெல்லியில், ஆம் ஆத்மியும் அதே நகர்ப்புற நக்சல் சிந்தனையை ஊக்குவித்து வந்தது. காங்கிரஸின் இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை நாட்டின் சாதனைகளைத் தாக்குகிறது. நகர்ப்புற நக்சல்களின் டிஎன்ஏ காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தவுடன், இந்த காங்கிரஸ் ஒவ்வொரு அடியிலும் அழிக்கப்படுகிறது.
இந்த ‘ஆம் ஆத்மி கட்சியினர் மக்கள் அரசியலை மாற்றுவோம் என்று சொல்லி அரசியலுக்கு வந்தார்கள், ஆனால் இவர்களே முற்றிலும் நேர்மையற்றவர்களாக மாறிவிட்டார்கள். இன்று நான் அண்ணா ஹசாரேவின் அறிக்கையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அண்ணா ஹசாரே இந்த மக்களின் தவறான செயல்களின் வலியை நீண்ட காலமாகத் தாங்கி வருகிறார். இன்று அவரும் அந்த வலியிலிருந்து விடுதலை பெற்றிருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து பிறந்த கட்சி ஊழலில் ஈடுபட்டது. ஊழல் குற்றச்சாட்டில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சிறைக்குச் சென்ற நாட்டின் ஒரு கட்சியாக ஆம் ஆத்மி மாறியது. நேர்மைக்கான சான்றிதழ்களை தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொண்டவர்கள் ஊழல்வாதிகளாக மாறினர். இது டெல்லிக்கு இழைக்கப்பட்ட பெரிய துரோகம். மதுபான ஊழல் டெல்லியை அவமானப் படுத்தியது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் நடந்த மோசடிகள் ஏழைகளைப் பாதித்தது. அதற்கும் மேலாக, அவர்களின் ஆணவம் மிகவும் அதிகமாக இருந்தது, உலகம் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது,இந்த மக்கள் ‘ஷீஷ் மஹால்’ கட்டிக்கொண்டிருந்தனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.