எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிற போது இந்திய கடலோர காவல்படை ஏன் தடுக்கவில்லை என்கிற கேள்வியையும் மீனவர்கள் எழுப்புகின்றனர். அத்துடன் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமைக்கான கடற்பரப்பு உள்ளது; இதனை அறிந்தும் சிங்கள கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அத்துடன் தமிழ்நாட்டு மீனவர்கள் கட்டவே முடியாத பெருந்தொகை அபராதம் விதிப்பது, 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பது. தமிழக மீனவர்களை மொட்டை அடித்து சித்திரவதை செய்வது என இலங்கையின் அட்டூழியமும் அத்துமீறலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி நடுக்கடலில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14 தமிழ்நாட்டு மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.