தந்தை பெரியார் பிறந்த மண்ணிலேயே பெரியாரை விமர்சித்து இத்தனை ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருக்கிறோம் என மார்தட்ட நினைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமானின் கனவு தகர்ந்துவிட்டது; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு டெபாசிட் தொகை கூட கிடைக்கவில்லை என திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொளத்தூர் மணி கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எப்படியும் பாஜக, அதிமுக மற்றும் திமுக எதிர்ப்பு வாக்குகள் தமக்கு கிடைத்துவிடும்; பெரியாரைப் பற்றி கடுமையான அவதூறுகளை பரப்பியும் கூட பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் இவ்வளவு வாக்குகளைப் பெற்றுவிட்டேன் என மார்தட்டிக் கொள்ளலாம் என்று கருதி இருந்த சீமானின் கனவு சிதைந்து போய்விட்டது; எப்போதும்போல் இப்போதும் டெபாசிட் தொகையை இழந்து இருக்கிறது நாம் தமிழர் கட்சி. இது சீமானுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அதுமட்டும் இல்லை.. எந்த கட்சியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக; மன நிறைவு அடைய வேண்டும் என்ற ஆவலுடன் இவ்வளவு மோசமாக, பெரியார் மீது அவதூறுகளை பரப்பினாரோ அதே கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.. சீமான் அளவுக்கு மீறி பேசிவிட்டாரோ.. நாம் சொன்னதற்கு மாறாக அதிகமாக பேசிவிட்டாரோ. சீமானின் அவதூறு கேவலமாகவும் இருக்கிறது என்பதை அண்ணாமலை வெளிப்படுத்தி இருக்கிறார்..
ஆக, தேர்தலிலும் தோல்வி.. பெரியாரை விமர்சிப்பதை ஏதோ ஒரு ராஜதந்திர நடவடிக்கை என கருதி செயல்பட்டதிலும் சீமானுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது. இனிமேலாவது அடுத்த கட்சிகளை நம்பி கருத்துகளை வெளியிடாமல், அடுத்தவர் உத்தரவுக்கு இணங்க கருத்துகளை பேசாமல் சொந்தக் கருத்துகளை மட்டுமே சீமான் பேச வேண்டும்; சொந்த நிலையில் இருக்க வேண்டும். கேவலமான முறையில் யாரையும் அவதூறு பரப்பக் கூடாது என்ற பாடங்களை அவர் பெற்றால் அதுவே போதும் என கருதுகிறோம்.
டெல்லியைப் பொறுத்தவரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் பாடம் கற்பித்திருக்கிறார்கள் என்றுதான் நாங்கள் கருதுகிறோம். இந்தியா கூட்டணி என்ற முயற்சிக்கான முன்னெடுப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்களிப்பு செய்திருந்தார். ஆனால் ஆம் ஆத்மி கட்சி இதனை புறக்கணித்தது. ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் காங்கிரஸை தம்முடன் கூட்டணியில் சேர்த்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் அதிக இடங்களைப் பெற்றிருக்க முடியும் என்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது பாடமாக இருக்கிறது. இவ்வாறு கொளத்தூர் மணி கூறினார்.