போர்ச்சுகல் ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்!

நடிகர் அஜித் குமார் இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். போர்ச்சுகல் நாட்டில் நடக்கும் ரேஸில் இப்போது அஜித் பங்கேற்றுள்ள நிலையில், அவரது கார் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது. துபாயில் பயிற்சியின் போது அவரது கார் விபத்தில் சிக்கிய நிலையில், மீண்டும் இப்போது கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித் குமார். இவரது படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் அதற்கு மாபெரும் ஓபனிங் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அஜித்குமார்: என்னதான் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அஜித்திற்கு எப்போதும் கார் ரேஸில் தான் அதிக ஆர்வம். முன்பு சினிமாவில் நடிக்கும் போதே கார் ரேஸிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். இடையில் சில ஆண்டுகள் கார் ரேஸை அவர் விட்டிருந்த நிலையில், இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனியாக டீமையும் ஆரம்பித்து இருந்தார். கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. இதில் மிக சிறப்பாக செயல்பட்ட அஜித்குமார் ரேஸிங் 3வது இடத்தை பிடித்தது.

துபாயை தொடர்ந்து இப்போது போர்ச்சுகல் நாட்டில் கார் ரேஸ் நடைபெறுகிறது. அதிலும் அஜித்குமார் ரேஸிங் பங்கேற்கிறது. இதற்காக அவரது டீம் ரெடியாகி வருகிறது. இதற்கிடையே அஜித் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரது கார் விபத்தில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். போர்ச்சுகல் ரேஸிங் தொடர்பாக அஜித் மேலும் கூறுகையில், “இங்கு ரேஸ் செய்யும் போது நன்றாக இருக்கிறது. புத்துணர்ச்சி தருகிறது. கார் ரேஸ் ஜாம்பவான் அயர்டன் சென்னா இங்கு தான் தனது முதல் ஃபார்முலா 1 வெற்றியைப் பதிவு செய்திருந்தார். அவர் வென்ற அதே ரேஸ் சர்க்யூட்டில் ரேஸ் செய்வதை நம்ப முடியவில்லை. இது பெருமையாக இருக்கிறது. இது ஈஸியான சர்க்யூட் இல்லை. அதிலும் குறிப்பாகக் கடைசி செக்டாரை டெக்னிக்கலாகவே அணுக வேண்டும். இங்கு எனது கார் ரேஸ் டைமிங் குறைந்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த ரேஸ் நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது. ஆனால், காலை நடந்த பயிற்சி சுற்று மோசமாகப் போனது. எனது கார் மிக மோசமான விபத்தில் சிக்கியது. மெக்கானிக் மற்றும் டீம் உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் காரை சரி செய்துவிட்டனர். இதன் காரணமாகவே தகுதி சுற்றுக்குள் எனது கார் தயாரானது. இதற்கு நான் எனது டீமிற்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்” என்றார்.

கார் விபத்தில் சிக்கினாலும் அஜித் பாதுகாப்பாகவே இருக்கிறார். இதன் காரணமாகவே சில மணி நேரத்தில் நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் அவரால் பங்கேற்க முடிந்தது. இந்த ரேஸில் அஜித் பங்கேற்கும் போட்டியைக் காணப் பலரும் நேரில் சென்றுள்ளனர். மேலும், நேரலையிலும் பார்வையாளர்கள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டு நெறியாளர் கேள்வி எழுப்பியதற்கு நடிகர் அஜித், “எனக்கு மிகவும் பிடித்த இந்த மோட்டர் ஸ்போர்ட்ஸை இப்போது பலரும் பாலோ செய்ய தொடங்கியுள்ளது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனது ரசிகர்கள் மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை அக்கறையுடன் கவனிக்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்றார்.