”சந்தல்” சமூகத்தின் திரௌபதி முர்மு புகழ் “சந்தனமாக” மணக்கட்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

ஒடிசா மாநிலத்தின் சந்தல் சமூகத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் புகழ் உலகம் முழுவதும் சந்தனமாக மனக்கட்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று திரௌபதி முர்மு சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளதாவது:-

ஒடிசா மாநிலத்தில் Santal சமூகத்தில் பிறந்த திரௌபதி முர்மு அவர்களின் புகழ் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் sandal – சந்தனமாக மனக்கட்டும்! திரௌபதி முர்மு அவர்கள் அமோகமான வெற்றி பெற்று, தான் பிறந்த சமுதாயத்திற்கு மட்டுமன்றி, பாரத தேசத்திற்கு உலகளவில் மிகப் பெரிய நன்மதிப்பையும் மரியாதையையும் உருவாக்குவதோடு; இந்தியாவை ஒரு வலுவான தேசமாக உருவாக்கிட அவர் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.