கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!

கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 7,300-க்கும் மேலான கவுர விரிவுரையாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி நடத்தி வரும் தொடர் அறப்போராட்டம் மிக நியாயமானது. அதனை முழுமையாக நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது.

கவுரவ விரிவுரையாளர்கள் எனப் பெயரளவில் கூறப்பட்டாலும் தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் மிகவும் இழிவான நிலையிலேயே அவர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். தங்களது கல்வித்தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் எனும் பெரும் நம்பிக்கையிலேயே அவர்கள் சொற்ப ஊதியத்திற்கு இப்போதுவரை பணியாற்றி வருகின்றனர். அதுவும் மே மாதம் விடுத்து, 11 மாதங்களுக்கே அவர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், துறைத்தலைவர்கள் இல்லாத பல கல்லூரிகளில் இவர்கள்தான் தூணாக நின்று தாங்கிப் பிடித்து, லட்சக்கணக்கானப் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றனர்.

பல்கலைக்கழக மானியக்குழு கவுர விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதனை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பும் உறுதிசெய்திருக்கிறது. இருந்தும், அம்முடிவு இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை. ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது முதுமொழி. ஆனால், இங்கு கற்பிக்கும் ஆசிரியப்பெருந்தகைகளுக்கே மதிப்பில்லை என்பதுதான் புறச்சூழலாகும். பல ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கோரிப் போராடி வரும் இவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு செய்யப்படாது, தற்காலிகப்பணி என்பதுதான் நிரந்தரமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அறிவுக்கருவறையாகத் திகழ்பவைக் கல்விக்கூடங்கள். அதனையுணர்ந்தே, மேலை நாடுகளில் ஆசிரியர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு ஆசிரியப் பெருமக்களே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராட வேண்டிய மோசமான நிலையிருப்பது வெட்கக்கேடானதாகும்.

ஆகவே, தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களது பணியினை நிரந்தரம் செய்ய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தி.மு.க. அரசுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.