பட்ஜெட் கூட்டாட்சியின் அடிப்படை அம்சங்களை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது: துரை வைகோ!

மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட், இந்தியாவின் கூட்டாட்சியின் அடிப்படை அம்சங்களை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது; தமிழ்நாட்டுக்கான போதுமான நிதியை ஒதுக்காமல் பீகார் தேர்தலுக்கான பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி கடுமையாக சாடினார்.

லோக்சபாவில் பட்ஜெட் குறித்த விவாதத்தில் துரை வைகோ எம்பி பேசியதாவது:-

கூட்டாட்சி என்பது குடியரசின் ஒருங்கிணைந்த கொள்கையாகும். அது, பன்முகத்தன்மையும், பல்வேறு கலாச்சாரப் பின்னணியையும் கொண்ட நமது நாட்டில், அமைதி, நிலைத்தன்மை, மற்றும் சகிப்புத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. எனினும், இந்த மத்திய பட்ஜெட், கூட்டாட்சியின் அடிப்படை அம்சங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

பீகாருக்கு வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எங்களுக்கு எந்தக் ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இயற்கை பேரழிவுகளான சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் அதிக பாதிப்புக்குள்ளாகும்போது, அவற்றுக்கேற்ற நிதியுதவி ஏன் வழங்கப்படவில்லை? 2023-ம் ஆண்டு மிக்ஜாம் (Michaung) புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்தன. அதேவேளையில், தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை பேரழிவை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாடு அரசு ரூ. 37,906 கோடி நிவாரணத் தொகை கோரியது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட பிறகும், வெறும் 276 கோடியை மட்டுமே வழங்கியது ஒன்றிய அரசு. இது, தமிழ்நாடு கேட்ட தொகையில் ஒரு சதவீதம் (1%) கூட இல்லை.

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் (Fengal) புயல், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை கடுமையாக பாதித்தபோது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6,675 கோடி வழங்க மத்திய அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தார். ஆனால், இதுவரை ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறைக்கு சமக்ர சிக்‌ஷ அபியான் (Samagra Shiksha Abiyan) திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிலுவையில் உள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம், பள்ளிகளைப் பராமரிக்கும் செலவுகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் திரும்ப செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட அனைத்தும் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 26,000 கோடி இன்னும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் ரூ.1,635 கோடி சம்பள பாக்கி கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது. இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென எந்த சிறப்பு திட்டமும் இல்லை. திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அம்பேத்கரின் நதிகள் இணைப்பு கனவைப் பற்றிக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. ஆனால், இந்த அரசு, தமிழகத்திற்கு அத்தியாவசியமான, மிகவும் பயனளிக்கக்கூடிய காவேரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாகவும், தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8.8% பங்களிப்பு செலுத்தும் மாநிலமாகவும் உள்ளது. மேலும், இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாடு, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10% பங்கு வகிக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி, மத்திய அரசின் பொது வரி பகிர்மானத்தில் தமிழகத்தின் பங்கு வெறும் 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தில் மட்டுமே இடம்பிடித்த தமிழ்நாடு, மத்திய பட்ஜெட்டிலும், மத்திய நிதியமைச்சர் மற்றும் பிரதமரின் இதயத்திலும் இடம்பிடிக்கவில்லை. பிரதமர் மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (Collective Efforts, Inclusive Growth) என்ற, “அனைவருடைய கூட்டு முயற்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்பது ஓர் அற்புதமான முழக்கம் ஆகும். பிரதமர் மோடி அவர்களே, இதில், அனைவருடைய கூட்டு முயற்சி என்பது ஏற்கனவே இங்கு இருக்கிறது. இந்திய குடிமக்கள், எதிர்க்கட்சிகள், அனைவரும் நமது இந்திய நாட்டை சிறந்த வலிமைக்க நாடாக உயர்த்துவதற்கு உங்களுடன் இருக்கிறோம். ஆனால், (சப்கா விகாஸ்) அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது மட்டும் இன்னும் நடக்கவில்லை. பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக தயாரிக்க வேண்டிய இந்த பட்ஜெட், பாஜக மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டைப் ‘மக்களால், மக்களுக்காக, மக்களுக்குள்’ (By the people, for the people, of the people) என்று விவரிக்கிறார். ஆனால், இந்த பட்ஜெட்டை பார்த்த பிறகு, அவர்கள் ‘மக்கள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. நிச்சயமாக இது ஏழைகளுக்கான பட்ஜெட் அல்ல. இது பொதுமக்கள், விவசாயிகள், வேலை தேடுவோர் ஆகியோருக்கான பட்ஜெட்டும் அல்ல. உறுதியாக இது, பாஜக கட்சிக்காரர்களுக்கு மட்டுமான பட்ஜெட் ஆகும். மேலும், பாஜகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய பட்ஜெட் ஆகும். இது, நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். உண்மையான ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (Collective Efforts, Inclusive Growth) என்ற அனைவருடைய கூட்டு முயற்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது நடைமுறைக்கு வந்தால்தான் 2047-ம் ஆண்டுக்குள் நாம் ஒரு வளமான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை மீண்டும் நான் வலியுறுத்திக் கூறுகிறேன். இவ்வாறு துரை வைகோ பேசினார்.