தமிழ்நாடு முதல்வராகலாம் என்று கனவில் இருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அதைவிட பெரிய பதவி கிடைக்கும் என கனவு காண்கிறார்; நிர்மலா சீதாராமனின் கனவு நிறைவேற வாழ்த்துகள் என நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசினார்.
லோக்சபாவில் பட்ஜெட் குறித்த விவாதத்தின் மீது தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் பீகார் தேர்தலை முன்னிட்டு அங்கு அதிக திட்டங்களை அறிவித்துள்ளனர். ஆனால் தென் மாநிலங்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் போனஸ் அல்லது மாயாஜால அறிவிப்பை பார்க்கலாம். கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தொழில் வழித்தடம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெங்களூர், சென்னை, ஐதராபாத் போன்ற தகவல் தொழில்நுட்ப மையங்கள் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்தாலும், அவர்களுக்கு எந்த சலுகையும் இல்லை.
கடந்த வாரத்தில், தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.2,000 கோடியை மத்திய அரசு எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்களுக்கு திருப்பியளித்துள்ளது. மாணவர்களைத் தண்டிக்கும் மத்திய அரசு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். எங்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். எங்கள் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். எங்கள் சொந்த நிதியில் அவர்களுக்கு ஆதரவளிப்போம். இந்தியாவிலேயே திராவிட மாடல் அடிப்படையில் வெற்றி பெற்ற மாநிலம் ‘தமிழ்நாடு’.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பெண்கள் கல்வி கற்கும் பெரியார் என்ற ஒரு மனிதனால்தான். அதை அவர் மறக்கவே கூடாது. 2017 ஆம் ஆண்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் தமிழ்நாட்டில் இருந்தார். முதல்வராகலாம் என்று நினைத்து, அந்த பதவிக்காக ஏங்கிக் கொண்டிருந்ததால், இந்த ஆண்டு நீட் வராது, இந்த ஆண்டு தமிழகத்துக்கு நீட் விலக்கு என்று கூறினார். அனைத்து மாணவர்களும் நம்பினர். ஆனால் நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால் அவர் சொன்னது நிறைவேறாது என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களை கவர, அவர் முயற்சித்தார். அதேபோன்று அவர் இப்போது ஒரு பெரிய பதவிக்காக முயற்சி செய்து இருக்கிறார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் நாங்கள் அவரை வாழ்த்துகிறோம்.
இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. 2023-–24ல் 8 கோடி பேர் (5.7%) மட்டுமே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள்தான் நேரடி வரி செலுத்துபவர்கள். அவர்களில் 4.15 கோடி பேர் மாதம் ரூ.50,000க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். 1.5 கோடி பேர் மாதத்திற்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பதால், வரிச் சலுகைக்கு அவர்கள் தகுதி பெறவில்லை. இதனால் பயன்பெறும் 2.5 கோடி பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இது மக்கள் தொகையில் 1.75% மட்டுமே. இந்த நடவடிக்கை டெல்லியில் பாஜக வாக்குகளைப் பெற உதவியது. இது ஒரு குறுகிய கால இனிப்பு. நிலையான தீர்வு அல்ல. ஆனால் வளர்ச்சி தேக்கமடைந்ததால், விலைவாசி உயர்ந்துள்ளதால் அவர்களுக்கும் இதில் எந்த பலனும் இல்லை. எஞ்சிய 98.25% இந்தியர்களுக்கு 12 லட்சம் வருமான வரிச் சலுகையால் எந்த லாபமும் இல்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மறைமுக வரிகள் மூலம் அதிகளவில் செலுத்துகிறார்கள். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.