தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது தி.மு.க.வுக்கு கட்சிப் பணியாற்றவா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகழை பாடும் வகையில் கேள்வி கேட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், முதல்-அமைச்சரின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டிருக்கும் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
முதல்-அமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது அரசுப்பணிகளில் இருந்து கொண்டு தி.மு.க.வுக்கு கட்சிப் பணியாற்றவா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கலாச்சாரம், நவீன வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் விடுதலைப் போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன் போன்ற பாடத்திட்டங்களோடு, முதல்-அமைச்சரின் புகழ் பாடவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா? என அரசுப்பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, இனிவரும் காலங்களில் அந்தந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் அடங்கிய கேள்விகள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்வதோடு, அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.