40 நாட்களில் 77 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்: டிஆர் பாலு!

இலங்கை கடற்படையால் கடந்த 40 நாட்களில் மட்டும் 77 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்; தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் கைது விவகாரத்தில் மத்திய அரசால் தீர்வு காண முடியாத நிலையில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுகவின் டிஆர் பாலு எம்பி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக லோக்சபாவில் டிஆர் பாலு எம்பி பேசியதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்களின் துயர நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். உண்மையில், கடந்த 2024 ஆம் ஆண்டில், 528க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு, 40 நாட்களுக்குள், 77க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இலங்கை கடற்படையின் மீனவர்களை துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவர்களைக் காவலில் வைத்தது. மத்திய அரசால் இனி மீனவர்களை காக்க இயலவில்லை என்றால், இருநாட்டு மீனவர்களும் அவர்கள் பிரச்சினைக்கு அவர்களே தீர்வு காணட்டும். ஆகையால் மீனவர்கள் கைது விவகாரத்துக்கு நிரந்தரமான தீர்வை உருவாக்க வேண்டும். இவ்வாறு டிஆர் பாலு பேசினார்.