விலைவாசி உயர்வு மற்றும் அதை தடுக்க தவறும் மத்திய அரசின் மெத்தன போக்கையும் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.
விலைவாசி உயர்வு மற்றும் அதை தடுக்க தவறும் மத்திய அரசின் மெத்தன போக்கையும் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வசந்த் கூறியதாவது:-
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறிப்பாக காய்கறிகள், சமையல் எண்ணெய், பால் போன்ற பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது. இது பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மீதான சுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலோ, நிதி அறிக்கையிலோ விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மத்திய அரசு முன்வைக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி மக்கள் சுமையை குறைப்பதற்கு அரசு முன்வரவில்லை என்பது மக்கள் விரோத செயல்.
மக்களின் வருமானம் கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. அவர்கள் வருமானத்தை விட செலவு அதிகமாக இருப்பதற்கு இது முக்கிய காரணம்.விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வண்ணம் தொழிலாளர்களின் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டியது அரசின் கடமை. அவர்களுக்கு குறித்த நேரத்தில் சரியான ஊதியம் வழங்க இந்த அரசு தவறியுள்ளது.
மத்திய அரசின் தவறான ஜி.எஸ்.டி வரி விதிப்பும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர காரணமாக உள்ளது.மேலும் விலைவாசி உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த விலை உயர்வு குறித்தும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வு குறித்தும் பாராளுமன்றத்தில் மற்ற அலுவல்களை மாற்றி வைத்து விவாதிக்க வேண்டுமென ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளேன். இவ்வாறு விஜய் வசந்த் தரப்பில் கூறப்பட்டது.