இப்போதெல்லாம் பொதுவாகவே அரசு மருத்துமனையில் சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அதை ஊதிப் பெருதாக்கி பூதகரமாக்குவது வாடிக்கையாவிட்டது. அந்த எண்ணம் தவறானது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
போரூர் அரசு மருத்துவமனைக்கு தனது மகனின் காது வலி பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவதற்காக நடிகர் கஞ்சா கருப்பு 10 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவர் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த நோயாளிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறுகையில், போரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு சித்த மருத்துவர் மட்டுமே இருந்தார். காலை 8 மணிக்கு வர வேண்டிய மருத்துவர் மதியம் 3 மணிக்குத்தான் வருவார் என்றார். காலை 7 மணி முதலே மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட நோயாளிகளும் ரத்த வாந்தி எடுத்த மூதாட்டியும் காத்திருந்தனர். ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாரும் வரவில்லை. மேலும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அமர்ந்திருந்தார். இப்படி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாருமே இல்லை. இது வேதனையை அளிக்கிறது. மற்ற ஊர்களில் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் மட்டும் சில இடங்களில் இது போன்ற நிலை உள்ளது. ஏன் சென்னையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் சம்பளம் வாங்கவில்லையா? என்று பல்வேறு புகார்களை கூறியிருந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மக்கள் அதிகமான மருத்து சேவைக்காக இந்த மருத்துமனையை அணுகி கொண்டிருப்பதால், நமது முதல்வர் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட புதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். ஒரே நேரத்தில் 1100 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட திருவள்ளூர் மருத்துமனைக்கு தொடர்ந்து முதல்வர் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உதவி செய்து வருகிறார். அந்த வகையில், இன்று பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கஞ்சா கருப்பு புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நீங்க பெயரையே ஒரு மாதிரி சொல்கிறீர்கள். கருப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். பெயருக்கு முன்பு நல்ல எந்தவொரு அடையாளத்தையாவது சொல்லலாம். அவர் தனது மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அனைவரும் உள்ளே இருந்துள்ளனர். ஆனால், அவர் பேட்டியில் இந்த மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை. செத்துப்போன பிணங்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று சினிமா வசனத்தைக் கூறியுள்ளார். உடனடியாக சென்னை மேயர் சமூக வலைதளத்தின் மூலமாக விடுமுறை நாளாக இருந்தாலும்கூட நேற்று எத்தனை மருத்துவர்கள் இருந்தார்கள். எத்தனை ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர் என்ற தகவல்களை கூறியுள்ளார்கள். இத்துடன் அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கருதுகிறேன். இதற்கு மேல் கிளறினால் கஞ்சா கருப்புக்குத்தான் பாதிப்பு என்று கூறினார்.
சென்னை கண்ணகி நகர் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் திருவல்லிக்கேணி மருத்துவமனையில் கர்ப்பிணி சேர்க்கப்பட்ட நிலையில் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு, சென்னையில் கண்ணகி நகரும், திருவல்லிக்கேணியும் தொலைவு இல்லை. அருகிலேயே மகப்பேறு மருத்துவமனைகள் நிறைய உள்ளன. ஏற்கனவே இதுகுறித்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் இல்லாததால் அந்த சம்பவம் ஏற்படவில்லை. இப்போதெல்லாம் பொதுவாகவே அரசு மருத்துமனையில் சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அதை ஊதிப் பெருதாக்கி பூதகரமாக்குவது வாடிக்கையாவிட்டது. அந்த எண்ணம் தவறானது. மக்கள் வரிப் பணத்தில் இயங்குகிற மருத்துவ சேவை அளிக்கும் அமைப்பு இது. அரசு மருத்துவ சேவையை மக்கள் இப்போது அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்றார்.