விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு புதிய படமொன்றில் நடித்து வந்தார். இப்படத்துக்கு ‘லவ் மேரேஜ்’ எனத் தலைப்பிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதில் கவுதம் மேனன், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், எடிட்டராக பரத் விக்ரமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இப்படத்தின் கதைகளம் குறித்து இயக்குநர் சண்முக பிரியன், ”கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘லவ் மேரேஜ்’ தயாராகிறது. தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் அஸ்யூர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கோடை விடுமுறை இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.