மத்திய பாஜக அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கவிஞர் குடியரசு நினைவுநாளையொட்டி, சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் அவரது உருவப் படத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மாநிலங்களவையில் நான் இருந்த அத்தனை ஆண்டுகளிலும் மீனவர்கள் தொடர்பாக கேள்வியெழுப்பாத நாட்களே கிடையாது. இந்திய அரசின் மெத்தனப் போக்கால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற நிலைமை இருப்பது வருத்தமாக உள்ளது. தமிழக முதல்வர் பிரதமரிடம் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பலமுறை வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய பாஜக அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை. தமிழர்களை உதாசீனம் செய்யும் மத்திய பாஜக அரசுக்கு கண்டிக்கிறேன். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் இணைந்திருந்தால் இந்தத் தேர்தல் முடிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். காங்கிரஸுக்கும் வெற்றி கிடைத்திருக்கும். ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி சில மாதங்களில் காலாவதியாகவுள்ள நிலையில், திமுகவிடம் ஏதேனும் கோரிக்கை வைக்கப்பட்டதா என கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, “அதுபோல் எழுத்துபூர்வமாக உறுதி ஒன்றும் போடவில்லை. நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை” என வைகோ பதிலளித்தார்.
நிகழ்வில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், கழக குமார், சைதை சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே, அவர் நேற்று விடுத்த அறிக்கையில், “தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், பாவூர்சத்திரம் பகுதியில் தமிழக அரசு சார்பில் கலைக்கல்லூரி ஒன்றை உருவாக்கித் தர ஆவன செய்ய வேண்டும். கல்லூரிக்குத் தேவையான அரசு நிலம் அங்கு உள்ளது” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.