பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை: அமைச்சர் பெரியசாமி

பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறினார்.

தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 4 ஆண்டுகளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களால், இன்னும் 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான் தொடரும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இது, அந்த இயக்கம் இல்லாமல் போய் விட்டதற்கு சமம்.

இனி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக இருக்குமா?, இருக்காதா? என்பது சந்தேகம் தான். பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. மக்கள் வாக்களித்ததால் தான் வெற்றி பெற்றோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கு என்றிருக்கிறோம். ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

சினிமா வேறு, அரசியல் வேறு என்று மக்கள் பிரித்து பார்க்கிறார்கள். இதனால் வெற்றி பெறும் அளவுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஓட்டுகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.