ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்: சிபிஐஎம்!

தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலத்தை வாங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

பஞ்சமி நிலம், நிபந்தனை ஒப்படைப்பு நிலம், நில உச்சவரம்பு நிலங்கள், கோவில் மடாதிபதி நிலங்கள் மீட்கப்பட்டு நிலமில்லா பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி சென்னை, நில நிர்வாக இயக்கத்தில் தலித் விடுதலை இயக்கம் நடத்திய காத்திருப்புப் போராட்டத்தை மாநிலக்குழு செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:-

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 08.10.2015 அன்று பஞ்சமி நிலத்தை மீட்பதற்கு என்று உயர்நிலைக் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட இந்தக் குழு பல ஆண்டுகளுக்குப் பிறகு 2.5 லட்சம் ஏக்கர்களை அடையாளம் கண்டிருக்கிறோம் என்று செய்தி வெளியிட்டது. ஆனால் மொத்தம் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 2.5 லட்சம் ஏக்கர் தான் அடையாளம் கண்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் உயர்நிலைக் குழு அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் அந்த 2.5 லட்சம் ஏக்கர் கூட இன்றைய தேதி வரை மீட்கப்படவில்லை. ஆகவே பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைப்பதில் திமுக மற்றும் அதிமுக 2 அரசாங்கங்களும் அலட்சியமாகவும், மெத்தனப் போக்காகவும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம்.

அதே நேரத்தில் அரசாங்கத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் பட்டியல் சமூக மக்களிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நிலங்கள் ஆட்சியாளர்களால் தொடர்ந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை பரந்தூர் விமான நிலையம் உட்படப் பல்லாயிரக்கணக்கான பட்டியல் சமூக மக்களின் நிலங்கள் வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் பறிக்கக்கூடிய நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு இருக்கிறது. நில உச்சவரம்பு சட்டம் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் அமலில் உள்ளது. இந்த 60 ஆண்டு காலத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் தமிழகத்தின் ஆட்சி செய்து உள்ளனர். அதன்படி மூன்று கட்சிகளும் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளனர். ஆனால் இந்த 60 ஆண்டு காலத்தில் வெறும் 2 லட்சம் ஏக்கர் மட்டும்தான் நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி நில விநியோகம் நடைபெற்றது. ஆகவே நில விநியோகத்தில் தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது உள்ள தமிழக அரசாங்கமாவது உயர்நிலைக் குழு குறைந்தபட்சமாக கண்டறிந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்பதற்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலத்தை வாங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் ராஜாகளம் எனும் இடத்தில் நிலம் வாங்கியது தொடர்பாக எழுந்த புகாரை எஸ்.சி, எஸ்.டி ஆணையம் விசாரித்தது. அதன்படி, பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது எஸ்.சி எஸ்.டி ஆணையம். பஞ்சமி நிலத்தை ஓ.பன்னீர்செல்வம் தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினஎ நலத்துறை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.சி, எஸ்.டி ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.