அதிமுக ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார்: ஓ.பன்னீர்செல்வம்!

“அதிமுக ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இல்லையென்றால் ஆட்சிக்கு வந்திருப்போம்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதுதொடர்பான மனுக்களை விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி தீர்ப்பளித்தனர். இந்த உத்தரவை வரவேற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க முழு உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தோம். நீதிமன்றத்துக்கு என்னென்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கும் உள்ளது. இதன் அடிப்படையில் பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

அதிமுகவை இப்படி சின்னாபின்னப்படுத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது? கட்சிக்கு விசுவாசமானவர் செங்கோட்டையன். அவர் மீது எந்த அதிருப்தியும் இல்லை. கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர் செங்கோட்டையன். அதிமுகவில் நான் இணைய எந்த நிபந்தனையும் இல்லை. அதிமுக ஒன்று சேர எந்த நிபந்தனையும் நான் விதிக்க மாட்டேன். சசிகலா, தினகரனிடமும் பேசியுள்ளேன். அதிமுக ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததன் விளைவுதான் இதெல்லாம். அதனால் தான் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். 2026 ஒன்றிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு.

டிடிவி தினகரனின் அமமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 14 லோக்சபா தொகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதை கருத்தில் கொண்டு அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என அமித் ஷா சொன்னார். அவர் சொன்ன எதையுமே எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வளவு சீட் ஜெயிப்பீங்க என எடப்பாடியிடம் அமித் ஷா கேட்டார். அதற்கு 150 சீட் உறுதி என்றார் எடப்பாடி. அப்படியென்றால், இந்த தேர்தலில் நான் சொன்னால் டிடிவி தினகரன் நிற்க மாட்டார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு 10 வாரியத் தலைவர் பதவி கொடுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால், அதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. அன்று எடப்பாடி ஒப்புக் கொண்டிருந்தால் இன்றைக்கு நாம் ஆளுங்கட்சி.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. அதிமுக ஒன்று சேர வாய்ப்பிருப்பதாக தொண்டர்கள் நினைக்கின்றனர். நாங்கள் நினைத்தால் எந்தக் கட்சியிலும் பதவி வாங்கிக்கொண்டு சென்றுவிடலாம், ஆனால் அது எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் உருவாக்கப்பட்ட கட்சியில் இருக்கவே விரும்புகிறோம். அதிமுக பொதுச் செயலாளர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர். பொதுச்செயலாளர் தேர்வு விதிகளை திருத்தவோ ரத்து செய்யவோ கூடாது என்பது நிரந்தர விதி. எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டி அந்த விதிகளை திருத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.