மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் மைதேயி – குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3 ஆம் தேதி ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக வெடித்தது. சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை அடித்து நொறுக்குவது, பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் என மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாகவே அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மணிப்பூர் சென்று நிலைமையைச் சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. எனினும் இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சரியாக ஓராண்டு, 9 மாதங்களுக்குப் பிறகு முதல்வராக இருந்த பைரன் சிங், மணிப்பூரில் நிலைமையை சீர் செய்ய முடியாததால் தனது பதவியை கடநத பிப். 9 ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.
தொடர்ந்து மணிப்பூர் மாநில பாஜக பொறுப்பாளர் சம்பித் பித்ரா, பேரவைத் தலைவர் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அடுத்த முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை.
இதனிடையே மணிப்பூரில் முழு நேர முதல்வர் இல்லாததால் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு நேற்றுடன்(பிப். 12) முடிவடைந்தது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சட்டப்பேரவை கூடினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த பிப். 10 ஆம் தேதி சட்டப்பேரவை கூட முடிவு செய்திருந்ததாகவும் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதைத் தவிர்க்க ஆளுநர் அந்த கூட்டத்தை ரத்து செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த சூழ்நிலையைத் தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மணிப்பூரில் வேறு முதல்வர் வந்தாலும் நிலைமை மாற வாய்ப்பில்லை எனவே, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குக்கி பழங்குடியின மக்களும் கூறி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் திரும்பி வந்ததும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.