முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் பேராண்மையின் காரணமாக தமிழ்நாட்டின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஒன்றிய அரசின் உளவுத்துறையில் முன்னாள் தலைமை அதிகாரியாக செயல்பட்ட ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது முதற்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க அரசின் செயல்பாடுகளை முடக்குகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவுகளை சீர்குலைக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஒப்புதல் தராமல் தொடர்ந்து முடக்கி வருகிறார்.
தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் தேடுதல் குழுவை அமைப்பதிலிருந்து அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக அரசுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். இவரது ஜனநாயக விரோதப் போக்கை முற்றிலும் உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை சட்டபேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் பெறுவதோடு, அவரே வேந்தராக இருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால், தற்போது ஆளுநரே வேந்தராக நீடிப்பதால் துணை வேந்தர்கள் நியமனத்தில் பலவிதமான குளறுபடிகள் ஏற்படுகின்றன.
தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 12 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பி, அதற்கு உரிய பதிலை விரைவில் வழங்க வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் ‘அத்துமீறும் ஆளுநருக்கு கண்டனம்” என்ற தலைப்பில் ஆங்கில நாளேடு ஒன்றின் தலையங்கத்தை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். தி இந்து ஆங்கில நாளேட்டில் இந்திய உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எழுப்பிய கூர்மையான கேள்விகளின் மூலம் அவர் வேண்டுமென்றே தனது அரசமைப்புக் கடமையிலிருந்து மீறியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சட்டப்பிரிவு 200-ன்படி ஒப்புதல் வழங்காமல் தவிர்ப்பதற்காகவே ஆளுநர் ஆர்.என். ரவி இந்த சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதையும், தமிழக அரசுக்கு விரோதமாக அரசியல் உள்நோக்கத்தோடு ஆளுநர் செயல்பட்டு வருவதை அந்த தலையங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதையும் தான் முதலமைச்சர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
இந்நிலையில், முதலமைச்சரின் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு எதிராக தமிழக ஆளுநர், எக்ஸ் வலைதளத்தில் விமர்சனம் செய்திருக்கிறார். உயர்ந்த அரசமைப்புச் சட்ட பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் ஒரு பத்திரிகையில் சொல்லப்பட்ட கருத்தை வைத்து ஆளுநர் மீது குற்றம் சாட்டுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். 150 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை உலகில் நம்பகத்தன்மையோடு செயல்படுகிற நாளேட்டின் தலையங்கத்தில் கூறப்பட்ட கருத்தை அலட்சியப் போக்கோடு ஆளுநர் பார்ப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுகிற பத்திரிக்கைகளின் கருத்தை ஆளுநர் மதிக்கத் தவறுவாரேயானால், அதைவிட எதேச்சதிகாரமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
பிரதமர் மோடியின் அரவணைப்பில் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு விரோதமாக அவர்களின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் செயல்படுகின்ற ஆளுநரின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிற 12 கேள்விகளின் மூலமாக, அரசமைப்புச் சட்டப்படி ஆளுநருக்கு என்ன அதிகாரம் என்பதை தெளிவுபடுத்துகிற முயற்சியில் உச்சநீதிமன்றம் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பஞ்சாப், கேரள மாநில அரசுகள் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநரின் அதிகாரங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், அதற்கு பிறகும் தமிழக ஆளுநர் திருந்துவதாக இல்லை. அதனால் தான் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ரிட் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீதிமன்றத்தின் மூலமாக, தமிழக உரிமைகளுக்காக போராடி வருகிற தமிழக முதலமைச்சர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறார். மாநில உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதை முதலமைச்சர் தனது நடவடிக்கைகளின் மூலம் நாள்தோறும் உறுதி செய்து வருகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் பேராண்மையின் காரணமாக தமிழ்நாட்டின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.